'உடனே விமானத்தை தரையிறக்குங்க!' சென்னையில் நடுவானில் பரபரப்பு! 224 பேருக்கு நடந்தது என்ன?
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
'பயணிகளின் கனிவான கவனத்துக்கு... நமது விமானத்தின் இடது என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டுள்ளது' இந்த அறிவிப்பு கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் ஒலித்திருக்கலாம். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்...
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தின் இடது என்ஜினில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தின் அவசரகால மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.
இண்டிகோ விமானம் 6E-723, கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இரவு சுமார் 11.30 மணியளவில் விமானம் சென்னை விமான நிலையத்தை நெருங்கியபோது, அதன் இடது என்ஜினில் பிரச்சனை இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். குறிப்பாக, என்ஜினில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து விமானிகள் உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையான ATC-க்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் முழு அவசரநிலை நடைமுறையை செயல்படுத்தினர்.
முன்னெச்சரிக்கையாக ஓடுபாதைக்கு அருகில் தீயணைப்பு வாகனங்கள், மீட்பு வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. இரவு 11.29 மணிக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
என்ஜின் கோளாறு இருந்தபோதிலும், விமானிகள் நிலைமையை திறம்பட கையாண்டு, விமானத்தை இரவு 11.37 மணிக்கு ஓடுபாதை 25-ல் பாதுகாப்பாக தரையிறக்கினர்.
விமானம் தரையிறங்கிய பின்னர், அவசரகால மீட்புப் பணியாளர்கள் விமானத்தை முழுமையாகச் சோதனை செய்தனர். அதன்பிறகே பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
விமானத்தில் இருந்த 224 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரவு 11.47 மணிக்கு முழு அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் வழக்கமான விமான சேவைகள் தொடர்ந்து நடைபெற்றன. விமானப் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

