அடித்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர்! சட்டமன்றம் வரை எழுந்த விவகாரம்.. பகீர் கிளப்பும் பின்னணி!
கள்ளக்குறிச்சி மாணவர் அமுதன், கோவை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி சமையலர்களுடன் ஏற்பட்ட முந்தைய தகராறு, போதைப்பொருள் புகார், பூங்கா நகர் தாக்குதல் வழக்கு ஆகியவை பின்னணியாக கூறப்படுகின்றன. ஐந்து மாணவர்கள் விசாரணையில் உள்ள நிலையில், சம்பவம் சட்டப்பேரவையிலும் விவாதமாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதன் என்ற 19 வயது மாணவன், கோவை-பொள்ளாச்சி சாலை, பிரிமியர் மில் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீமன் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அவர்களை வழிமறித்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர். அதில் ஸ்ரீமன் தப்பி ஓடிய நிலையில், அமுதனை அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளது. அதில் அமுதன் பலத்த காயம் அடைந்த நிலையில், அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே அமுதன் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து செட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் உடலை மீட்டு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த அமுதனின் பெற்றோர், அமுதனின் உடலை கண்டு கதறி அழுதனர். என் மகன் எந்த தவறும் செய்யவில்லை. சில தினங்களுக்கு முன்பு அமுதனும் அவனது நண்பனுக்கும் விடுதியின் சமையலர்களாகப் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், கல்லூரி நிர்வாகம் இருவரையும் விடுதியில் இருந்து வெளியேற்றினர். பின்னர் அந்தப் பிரச்சினை முடிந்து மீண்டும் கல்லூரி விடுதியில் தங்கிய நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் போதைப்பொருள் பயன்பாடு குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சமையல் தொழிலாளர்கள் தன மகனை அடித்துக் கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி இருந்தனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் துறை சார்பில் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் பூங்கா நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில், இரண்டாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வரும் இளவரசன் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் தங்கியிருந்தபோது, ஒரு கும்பல் வீட்டிற்குள் நுழைந்து அவர்களை மிரட்டி தாக்கியதுடன், செல்போன் ஒன்றையும் எடுத்துச் சென்றதாக செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் இந்த சம்பவத்தில் குற்ற செயலில் ஈடுபட்டவர்களில் அமுதனும் ஒருவர் என தெரியவந்ததுள்ளது. பூங்கா நகர் பகுதியில் நடைபெற்ற முந்தைய தாக்குதல் சம்பவத்தில் அமுதனுக்கு தொடர்பு இருந்தது காரணமாக தான் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும், அமுதன் கடந்த மாதம் கல்லூரி விடுதியில் பணிபுரியும் சமையலர் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து தான் அவர் கல்லூரி நிர்வாகத்தால் விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக அதே கல்லூரியை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காண தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் இடையே பிரச்சனை இல்லை எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சாபவம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கபட்ட மாணவனுக்கு நீதி வழங்க வேண்டும் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - பிரவீண்
ஒளிப்பதிவாளர் : தீபன்

