பீகாரின் அரைநூற்றாண்டு வரலாறு: லாலு, நிதிஷ்: இருவரின் கதை!
பீகாரின் அரசியல் வரலாற்றில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் முக்கியமான பாத்திரங்களை வகிக்கின்றனர். லாலு, சமூகநீதி மற்றும் சாதாரண மக்களின் குரலாக இருந்தார், ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகள் அவரை வீழ்த்தியது. நிதிஷ், நல்ல நிர்வாகத்துடன் பீகாரை முன்னேற்றம் செய்தார். இருவரும் பீகாரின் அரசியல் அடித்தளத்தை மாற்றியமைத்தனர்.
பீகாரின் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வாரியா கிராமத்தில் 1948இல் பிறந்தவர் லாலு பிரசாத் யாதவ். பாட்னா பல்கலைக்கழகம்தான் லாலுவின் முதல் அரசியல் களம்; பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவரானார். இந்திரா கொண்டுவந்த நெருக்கடிநிலை, நாடு முழுக்க பல இளைஞர்களை அரசியலின் மையத்துக்குக் கொண்டுவந்தது. அவர்களில் முக்கியமானவர் லாலு பிரசாத் யாதவ். பீகார் இரு தலைவர்களின் சிந்தனைக் களமாக இருந்தது. ஒருவர் ஜெயபிரகாஷ் நாராயணன்; இன்னொருவர் ராம் மனோகர் லோஹியா. ஜெ.பி, லோஹியா இருவரின் தாக்கமும் இயல்பாகவே லாலுவிடம் இருந்தது. ஜனநாயகம் தார்மீக நெறிகள் சார்ந்து இருக்க வேண்டும் என்று சொன்னவர் ஜெ.பி. லோகியாவோ, சமத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் சமூகநீதி முக்கியம் என்று கருதிய ஜெயபிரகாஷ் நாராயணன் முன்னெடுத்த முழுப்புரட்சி இயக்கத்தின் முக்கியமான தளகர்த்தர்களில் ஒருவராக 25 வயதேயான லாலுவும் இருந்தார்.
இந்திராவுக்கு எதிராக ஜனதா கட்சி பிறந்தது. பீகாரில் அதன் அங்கமாக லாலு இருந்தார். ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தபோது, இளம் எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார் 29 வயதேயான லாலு. பீகார் அரசியலின் தவிர்க்க முடியாத ஆளுமையான லாலு, 1990இல் மாநில முதல்வரானார் ரத யாத்திரை வந்த அத்வானியை பீகாரில் வைத்து கைது செய்ததால், நாடு முழுக்க பிரபலமானார் லாலு.
தேர்தல் வெற்றியாளர் மட்டுமல்ல லாலு; பீகாரின் அரசியல் அடித்தளத்தையே புரட்டிப்போட்டவர். லாலுவுக்கு மொத்தம் நான்கு அடையாளங்கள்…
ஒன்று: சாமானிய மக்கள் மொழியில் துணிச்சலான பேச்சு.
இரண்டு: பீகார் அரசியலை, மக்கள் தொகையில் பெருவாரியாக இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களின் கைக்குக் கொண்டுவந்தார்.
மூன்று: சிறுபான்மை மக்களின் பாதுகாவலர், மத நல்லிணக்க நாயகர்.
4ஆவது அடையாளம் எதிர்மறையானது. ஊழல் குற்றச்சாட்டுகள்; குடும்ப அரசியல்; அலட்சியமான சட்ட ஒழுங்கு நிர்வாகம். அவருடைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது அந்த நான்காவது காரணம்தான்.. ஊழல் ஆட்சி, காட்டாட்சி எனும் விமர்சனம்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கு லாலுவின் முதல்வர் பதவியை காலி செய்தது. தன் மனைவி ராஃப்ரி தேவியை முதல்வராக்கிய லாலு, ராஷ்டிரிய ஜனதா தளம் எனும் தனிக்கட்சியையும் தொடங்கினார். தேசிய அரசியலை நோக்கி நகர்ந்த லாலு, 2004இல் மன்மோகன் சிங் ஆட்சியில் ரயில்வே அமைச்சரானார் நஷ்டத்தில் இயங்கிய ரயில்வே துறையை பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலேயே, லாபத்தை நோக்கி நகர்த்தினார் லாலு.
லாலுவிடம் இருந்து நிதிஷ்-க்கு கைமாறிய பீகார் !
ஒரு கட்டத்தில் பீகாரின் ஆட்சி அதிகாரம் லாலுவின் கையிலிருந்து, அவரது பழைய நண்பரான நிதிஷ் குமார் கைக்குச் சென்றது. லாலு - நிதிஷ் இருவரின் வாழ்க்கையையும், பீகாரின் 50 ஆண்டு அரசியல் வரலாற்றையும் பிரித்துப் பார்க்க முடியாது. பீகாரின் பக்தியார்பூரில் 1951இல் பிறந்த நிதிஷ், குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர். பாட்னா பொறியியல் கல்லூரியில் படித்த நிதிஷ், பீகார் மின்வாரியத்தில் வேலை பார்த்தவர். லாலுவைப் போலவே நிதிஷும் கொந்தளிப்பான 1970களின் அரசியலில் இழுக்கப்பட்டவர்.
லாலு போல் நிதிஷ் பெரிய பேச்சாளர் கிடையாது; ஆனால், செயல்வீரர். லாலு, சமூகநீதி வாயிலாக வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்றால், நிதிஷ் நல்ல நிர்வாகத்தை உத்திரவாதப்படுத்தியவர். லாலுவின் பலவீனம்தான் நிதிஷின் பெரிய பலம். குடும்ப அரசியல், ஊழல் குற்றச்சாட்டு அதிகம் இல்லாதவர் நிதிஷ். பிற வட மாநிலங்களைப் போலவே, பீகாரிலும் காங்கிரஸின் இடத்துக்கு பாஜக மெல்ல வரத் தொடங்கியது. லாலுவை வீழ்த்தாமல் தன்னால் அந்த இடத்துக்கு வர முடியாது என நிதிஷை ஆதரிக்கும் முடிவை எடுத்தது பாஜக. பாஜக வந்துவிடக்கூடாது என்று ஆர்ஜேடி-யும், ஆர்ஜேடி வந்துவிடக் கூடாது என பாஜகவும் நிதிஷை ஆதரித்தார்கள். அதுதான், கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் கையில் பீகார் இருப்பதற்கு காரணம். முதலில் லாலு, பிறகு அவரது மனைவி ராஃப்ரி தேவி, இப்போது லாலுவின் மகன் தேஜஸ்வி என போட்டியாளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இந்தப் பக்கம் நிதிஷ் உறுதியாக நிற்கிறார் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், இந்துத்துவ அரசியல் செய்பவர் என நிதிஷை சொல்ல முடியாது.
குஜராத் கலவர பின்னணியில், மோடியை கடுமையாக எதிர்த்த வரலாறு நிதிஷுக்கு உண்டு. வறுமை, பின் தங்கிய சூழலில் இருந்த பீகாரை, வளர்ச்சியை நோக்கி நகர்த்தியதிலும் நிதிஷுக்கு முக்கிய பங்குண்டு பீகாருக்கென தனி அடையாள அரசியலை உருவாக்கியதில், லாலுவுக்கு இணையான பங்கு நிதிஷுக்கும் உண்டு. பீகாரின் முடிவுகள் பீகாரிகளாலேயே எடுக்கப்படுவதற்கு லாலு, நிதிஷ் இருவருமே காரணம் இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துபவர்களாகவும் லாலுவும், நிதிஷும் இருக்கிறார்கள்.

