லடாக் வன்முறை| சோனம் வாங்சுக்கை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி அவரது மனைவி மனு!
லடாக் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக், தற்போது சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால், ஜம்மு - காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சி வழங்கும் 6ஆவது அட்டவணை அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்தபோது லடாக்கில் வன்முறை வெடித்தது. அப்போது போராட்டக்காரர்கள் பாஜக அலுவலகத்துக்கு தீ வைத்ததுடன், வாகனங்களையும் கொளுத்தினர். இதனால் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றார். ஆயினும் இப்போராட்டத்தின்போது 4 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதற்கிடையே, போராட்டம் மற்றும் அதன் நீட்சியாக ஏற்பட்ட கலவரத்துக்கு சோனம் வாங்சுக்கின் அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டி, அவருடைய வெளிநாட்டு நிதி பெறும் பதிவை ரத்து செய்தது. தவிர, வன்முறை குற்றச்சாட்டு தொடர்பாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். அவரிடம் லடாக் காவல் துறையினரும் மத்திய உளவுத் துறையினரும் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, தனது கணவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என்றும் சமூகச் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில், சோனம் வாங்சுக்கை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், வாங்சுக்கிற்கு எதிராக NSA-ஐப் பயன்படுத்துவதற்கான முடிவு குறித்தும் கீதாஞ்சலி அங்மோ தனது மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸ் தளத்தில், தனது மனுவின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துகொண்ட அங்மோ, வாங்சுக்கின் உடல்நிலை குறித்து இன்னும் தனக்கு எந்த தகவலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வாங்சுக் ஒரு பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளையும் ஆங்மோ மறுத்துள்ளார்.
தொடர்ந்து இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, லடாக் லெப்டினன்ட் கவர்னர் கவிந்தர் குப்தா, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் லே மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் அங்மோ கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர், "என் கணவர் காவலில் வைக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்துகொள்ளவும், நீதிமன்றத்தின் முன் நீதி கோருவதற்கான அவரது சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டவும் நான் அவருக்கு உதவக் கூடாதா? என்னுடனோ அல்லது எங்களுக்கு நெருக்கமான வேறு யாருடனோ எந்த தொடர்பும் இல்லாமல், செப்டம்பர் 26, 2025 முதல் காவலில் வைக்கப்பட்டுள்ள என் கணவரின் நிலையை அறிய எனக்கு உரிமை இல்லையா? இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, அமைதியான கருத்துச் சுதந்திரம் மற்றும் நடமாடும் சுதந்திரத்திற்கு நமக்கு உரிமை இல்லையா” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.