தெலங்கானா|2026க்கு பிறகு மெட்ரோ திட்டப்பணிகளில் இருந்துவிலகும் L&T! இயக்குநர் சொன்ன அதிர்ச்சி காரணம்
தமிழகத்தில், திமுக ஆட்சியில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தெலங்கானாவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
தெலங்கானாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாலக்ஷ்மி திட்டத்தின்கீழ் மாநிலத்தில் அரசால் இயக்கப்படும் ஏசி அல்லாத பேருந்துகளில் பெண்களும் திருநங்கைகளும் இலவசமாக பயணிக்கமுடியும். இந்த நிலையில், ஹைதராபாத்தில் 2026-க்கு பிறகு நடைபெறவுள்ள மெட்ரோ திட்டப் பணிகளில் இருந்து எல்&டி நிறுவனம் விலகுவதாக அதன் இயக்குநர் ஷங்கர் ராமன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள ஷங்கர் ராமன், ”தெலங்கானாவில் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்குவதால், மெட்ரோ பயணங்களின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. இலவசப் பேருந்து உயர்வு திட்டம் பொதுப் போக்குவரத்தில் பாலினப் பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது. பெண்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கிறார்கள்; ஆண்கள், பயணத்திற்கு சராசரியாக 35 ரூபாய் செலுத்துகிறார்கள்.
ஹைதராபாத் மெட்ரோவில் தற்போது தினமும் சுமார் 4.8 லட்சம் பேர் மெட்ரோவை பயன்படுத்துகின்றனர். இந்த திட்டத்தால் ஏற்பட்ட பெரும் சுமையை குறைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ள அவர், ஹைதராபாத்தில் 2026-க்கு பிறகு நடைபெறவுள்ள மெட்ரோ திட்டப் பணிகளில் இருந்து எல்&டி நிறுவனம் விலகுவதாக தெரிவித்துள்ளார்.