\
Kosi River: Why Bihar Faces Severe Flood Risks Every Year
கோசி ஆறுX

பிகாரின் துயரம் “கோசி ஆறு” மிகப்பெரிய வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாவது ஏன்?

நேபாளத்தில் இருந்து பிகார் வழியாகப் பாயும் கோசி நதி, அடிக்கடி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துவதால் ‘பிகாரின் துயரம்’ என்று அழைக்கப்படுகிறது.
Published on

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி ஆற்றில், நேற்று காலை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அந்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 300க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும் 1500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் எனவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நேபாளத்தில் பாயும் போத்தே கோசி மற்றும் திரிசூலி நதிகளின் நீர், கோசி ஆற்றின் வழியாக இந்தியாவுக்குள் வருவதால், பிகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோசி ஆறு
கோசி ஆறுANI

அதிலும், நேபாளத்தில் இருந்து பிகார் வழியாகப் பாயும் கோசி நதி, அடிக்கடி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துவதால் ‘பிகாரின் துயரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தநிலையில், கோசி நதி ஏன் இவ்வளவு ஆபத்தானதாக இருக்கிறது? அதன் பின்னணியில் இருக்கும் புவியியல் காரணங்கள் என்ன? பார்க்கலாம்.

திபெத் மற்றும் நேபாள எல்லைப்பகுதியிலுள்ள இமயமலையில் உற்பத்தியாகும் கோசி நதி, சுமார் 720 கிலோமீட்டர் நீளமுடையது. ஏழு துணை ஆறுகளைக் கொண்ட இந்த நதி, நேபாளத்தின் திரிவேணி என்ற இடத்தில் ஒன்றாக இணைந்த பிறகே 'கோசி' என்ற பிரதான நதியாக வடிவம் பெறுகிறது. இதனால் தான், இந்த நதிக்கு சப்த கோசி என்று பெயர். இந்தநதி பிகார் வழியாக இந்தியாவிற்கு நுழைந்து இறுதியாக கங்கையில் கலக்கிறது.

Kosi River: Why Bihar Faces Severe Flood Risks Every Year
நொடியில் மூழ்கிய நேபாளம்.. மீண்டும் நெருங்கும் பேராபத்து? விஞ்ஞானிகள் விடுத்த பகீர் எச்சரிக்கை!

மேலும், இந்த ஆறு நேபாளத்தின் மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழை மற்றும் பனிப்பாறைப் பகுதிகளில் இருந்து வரும் நீரைச் சேகரித்து, சமவெளியை நோக்கி வேகமாக கொண்டு வருகின்றன. மலைப்பகுதியில் இருந்து சமவெளிக்கு வரும் போது, நதியின் வேகம் குறைகிறது. இதனால், நதி கொண்டு வரும் மணல் மற்றும் வண்டல் படிவங்கள் அதிக அளவில் தேங்குகின்றன. இதன் காரணமாக நதிப்படுகை உயர்ந்து, தண்ணீரை எடுத்துச் செல்லும் திறன் குறைகிறது.

கோசி ஆறு
கோசி ஆறுThe Wire

இந்த வண்டல் ஆற்றின் படுகையில் தொடர்ந்து தேங்கும்போது, நதியின் உயரம் அதிகரிக்கிறது. குறிப்பாக, ஆண்டுதோறும் சுமார் 10 கோடி டன் அளவுக்கு வண்டல் கோசி ஆற்றுப் படுகையில் சேர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு கட்டத்தில் தண்ணீர் இயற்கையான கரையை உடைத்து, தாழ்வான வேறு பகுதிக்குள் புதிய பாதையை உருவாக்குகிறது. இவ்வாறு நதி தனது பழைய பாதையை விட்டு விலகி, புதிய பாதையை உருவாக்கும் நிகழ்வுதான் ‘கோசி அவல்ஷன்’ (Kosi Avulsion) என்று அழைக்கப்படுகிறது. இதுவே, கோசி நதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளுக்கு முக்கிய காரணமாகும்.

அதாவது, கோசி நதி ஒரே பாதையில் நிரந்தரமாக ஓடும் நதி அல்ல. பல ஆண்டுகளுக்கு ஒருமுறை அதன் பாதையை மாற்றும் தன்மை கொண்டது. இதனால்தான் கோசி நதி “பீகாரின் சோகம்” என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட கோசி வெள்ளம் இதற்கு மிகப்பெரிய உதாரணம். நேபாளத்தில் கரை உடைந்ததைத் தொடர்ந்து, கோசி நதி பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த பழைய பாதையில் திரும்பி ஓடியது. இதனால் பீகாரின் பல மாவட்டங்கள் மிகப்பெரிய வெள்ளத்தில் சிக்கின. இந்தப் பேரழிவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போதைய நேபாள வெள்ளத்தால் பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேபாளத்தில் இருந்து வரும் நதிகளின் நீர்மட்டம் அதிகரித்தால், அதன் தாக்கம் இந்தியாவின் தாழ்வான பகுதிகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, நேபாளத்தில் பெய்யும் கனமழை முதல் இமயமலையின் புவியியல் அமைப்பு வரை, பல காரணிகள் இணைந்ததே கோசி நதியை மிகவும் வெள்ள அபாயம் கொண்ட நதியாக மாற்றியிருக்கிறது.

Kosi River: Why Bihar Faces Severe Flood Risks Every Year
சீனாவை நெருங்கும் ஆபத்து.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்.. பின்னணிக் காரணம் இதுதான்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com