நொடியில் மூழ்கிய நேபாளம்.. மீண்டும் நெருங்கும் பேராபத்து? விஞ்ஞானிகள் விடுத்த பகீர் எச்சரிக்கை!
பல மீட்டர் உயரத்திற்கு எழுந்த வெள்ளம், மின்னல் வேகத்தில் பாய்ந்து நகரங்களை நொடிப்பொழுதில் மூழ்கடித்து, கொத்துக் கொத்தாக மக்களைப் பலி கொண்ட கோரச் சம்பவம் நேபாளத்தில் நடந்துள்ள நிலையில், மீண்டும் பெருவெள்ளப் பாதிப்பு ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை இந்தியா–நேபாள எல்லையையொட்டிய திபெத் பகுதியில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரியில் உடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் நேபாளத்தின் போதே கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் நேபாளம், இந்தியா மற்றும் சீனாவின் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 150க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 900-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்துக்குச் சுற்றுலா சென்ற 80-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட 130-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் நிலை என்ன என்பது குறித்தும் இதுவரை தகவல் தெரியவில்லை. இந்த வெள்ளத்தின் தாக்கம் இந்திய எல்லைப் பகுதிகளிலும் எதிரொலிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, போதே கோஷி ஆற்றின் துணை நதிகள் பீகார் மாநிலத்திற்குள் பாய்வதால், பீகார் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் ஹை அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இமயமலைப் பகுதி முழுவதும் உள்ள மலைச் சூழல்கள், பனியாறுகள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் அபாயங்கள் குறித்து ஆய்வு செய்யும் முன்னணி அறிவியல் நிறுவனங்களில் ஒன்றான சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையமான (ICIMOD), நேபாள–சீன எல்லையில் ஆற்றில் இரண்டாவது பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ICIMOD அமைப்பின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் இடர் பிரிவின் தலைவர் கியாங்கோங் ஜாங், ”லெண்டே கோலாவில் ஏற்பட்ட பனிச்சரிவே இதற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், அதற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
நேபாள–சீன எல்லையில் ஆற்றின் மேல்பகுதியில் ஒரு தடை இன்னும் நீடிப்பதாகத் தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் இரண்டாவது வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், கரையோரப் பகுதி மக்களும் மீட்புப் படையினரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று ஏற்பட்ட பெருவெள்ளத்தின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், மீண்டும் ஒரு பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
