”நீதியைத்தான் நாங்கள் விரும்புகிறோம்; மற்றவர்கள் எங்கே?” - கொல்கத்தா பெண் மருத்துவரின் தாய் பேட்டி!
வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு (2024, ஆகஸ்ட் 9), கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதில் மாநில அரசின் போக்கு மெத்தனமாக உள்ளதாக புகார் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மத்திய புலனாய்வு அமைப்பும் விசாரணையை நடத்தியது.
இந்த நிலையில், இவ்வழக்கில் சீல்டா நீதிமன்றம் சஞ்சய் ராய்தான் குற்றவாளி என இன்று தெரிவித்துள்ளது. பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 64 மற்றும் மரணம் மற்றும் கொலைக்கான தண்டனைகளைக் கையாளும் சட்டத்தின் பிரிவுகள் 66 மற்றும் 103 (1) ஆகியவற்றின் கீழ் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கண்டறியப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் தண்டனை விபரம் ஜனவரி 20ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அதன்படி, அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சஞ்சய் ராய்தான் குற்றவாளி என நீதிமன்றம் உறுதிப்படுத்தியைத் தொடர்ந்து, இறந்துபோன பெண் மருத்துவரின் தாயார் பேட்டி அளித்துள்ளார். அவர், ”சஞ்சய் ராய்தான் குற்றவாளி என்பது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையின்போது அவர் அமைதியாக இருந்ததே, என் மகளை வன்புணர்வு செய்து கொன்றுள்ளார் என்பதை நிரூபித்தது. ஆனால் இதை அவர் மட்டும் தனியாக செய்யவில்லை. இதில், இன்னும் கைது செய்யப்படாதவர்கள் உள்ளனர்.
அதனால், தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை. நானும் எனது கணவரும் தங்கள் வாழ்வின் கடைசிநாள் வரை நீதிக்கான போராட்டத்தைத் தொடருவோம். வழக்கு இன்னும் முழுமையடையவில்லை. எங்கள் மகளைக் கொன்ற மற்றவர்களுக்கு தண்டனை கிடைத்த பிறகுதான் அது முடியும். அந்த நாளுக்காகக் காத்திருப்போம். அதுவரைக்கும் தூக்கம் வராது. அந்த நீதியைத்தான் நாங்கள் இப்போது விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.