மே 4 வாக்கு எண்ணிக்கை |கொல்கத்தாவில் 60 நாட்களுக்கு 144 தடை.. நாளை முதல் அமல்!
வன்முறை சார்ந்த போராட்டங்கள் ஏற்படக்கூடும் என்பது குறித்த தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, நகரின் மைய வணிகப் பகுதியின் சில இடங்களில் 60 நாட்களுக்குத் தடை உத்தரவுகளை அமல்படுத்த கொல்கத்தா காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியா முழுக்க ஐந்து மாநில தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு 2011ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியில் உள்ளது. 2011, 2016, 2021 என தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கிறார். இந்த முறை பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி இருப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளும் இதையே தெரிவித்துள்ளன.
ஏப்ரல் 29 அன்று முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலின் முத்திரையிடப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததாகவும், முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியதை அடுத்து, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி இரவு கொல்கத்தாவில் உள்ள இரண்டு வாக்கு எண்ணும் மையங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் போபஜார் மற்றும் ஹரே தெரு காவல் நிலையங்களின்கீழ் உள்ள பகுதிகளிலும், தலைமையக போக்குவரத்து காவலர் மண்டலத்திலும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அதன் விளைவாக பொது அமைதிக்கு பெரும் இடையூறும், பொது அமைதிக்குக் குந்தகமும் ஏற்படக்கூடும் என்றும் நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் பெறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் மே 3 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா 2023 சட்டத்தின்கீழ், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவின்படி, கொல்கத்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு (strongrooms) 200 மீட்டருக்குள், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதை இந்த கட்டுப்பாடுகள் தடை செய்கின்றன. மேலும் தடிகளை அல்லது ஏதேனும் கொடிய அல்லது பிற அபாயகரமான ஆயுதங்களை எடுத்துச் செல்வது, அத்துடன் அமைதி அல்லது வாகனப் போக்குவரத்தைச் சீர்குலைக்கக்கூடிய செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

