மேற்கு வங்க தேர்தல் | நாட்டு வெடிகுண்டு வீச்சு.. பலர் காயம்.. நௌடா பகுதியில் பதற்றம்!
மேற்கு வங்கத்தில் இன்று முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முர்ஷிதாபாத் மாவட்டத்தின் நௌடா பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியதில் பலர் காயமடைந்தனர். அங்கு பதற்றம் நிலவுகிறது.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று (ஏப்ரல் 23) 16 மாவட்டங்களில் 152 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 152 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ள சூழலில், 3.6 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றவுள்ளனர். அங்கு, காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து காலை 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
இதற்கிடையே, மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், மேற்கு வங்கத்தில் வன்முறைச் சம்பவம் ஒன்று முதன்முறையாகப் பதிவாகியுள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தின் நௌடா பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் வீசிய நாட்டு வெடிகுண்டால் பலர் காயமடைந்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்ததைத் தொடர்ந்து, AUJP கட்சியைச் சேர்ந்த ஹுமாயூன் கபீர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால், அவரது வருகை TMC தொண்டர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்படக் காரணமாக அமைந்தது. வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கட்சித் தொண்டர்களுக்கும் காவல்துறைக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்ததால், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் படையினர் அங்குப் பணியில் அமர்த்தப்பட்டனர். கூட்டத்தைக் கலைப்பதற்காகக் காவல்துறை லேசான தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது; இருப்பினும், நிலைமை தங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லவில்லை என்று காவல்துறை தரப்பு மறுப்பு தெரிவித்தது.
முன்னதாக, நந்திகிராம் மற்றும் பபானிபூர் தொகுதிகளில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் சுவேந்து அதிகாரி, நந்திகிராமில் தனது வாக்கைச் செலுத்தினார். வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களையும், போலி வாக்காளர்களின் பெயர்களையும் நீக்கிவிட்டால், மம்தா பானர்ஜி தேர்தலில் வெற்றிபெறச் சிறிதும் வாய்ப்பில்லை என்று அவர் கருத்து தெரிவித்தார். மேலும், மாநிலத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

