கேரளா | அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் வேலை., நிறுத்தப்பட்ட திட்டம் மீண்டும் தொடக்கம்!
கேரள முதல்வர் பினராய் விஜயன் சமீபத்தில் நடந்த போதைப் பொருள் தடுப்பது விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெற்றோர் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதாவது, கடந்த 2023-ஆம் வருடம், கேரள அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு இடதுசாரி சங்கங்கள் உட்பட பல்வேறு தொழிலாளர் சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக திரும்பப் பெறப்பட்ட வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்ற திட்டத்தை கேரள அரசு மீண்டும் கையிலெடுத்திருக்கிறது.
குறிப்பாக, இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கேரள அரசின் 11-வது ஊதியக் குழு ஆணையம், வேலை நாட்கள் 5 ஆக குறைக்கப்படும் போது, அதற்கு பதிலாக அலுவலகங்கள் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை கூடுதலாக ஒரு மணி நேரம் செயல்பட வேண்டும் எனவும் பொது விடுமுறை நாட்களை 20-லிருந்து 15 நாட்களாகவும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்களை 15-லிருந்து 12 நாட்களாகவும் குறைக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் இதுவே, இந்த சட்டம் மீதான தொழிலாளர் சங்கங்களின் எதிர்ப்புக்கு காரணமாகவும் இருக்கிறது.
இந்நிலையில் தான், இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும், அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டத்தை கேரள மாநில அரசு கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே கேரள அரசின் தலைமை செயலாளர் வரும், 5 ஆம் தேதி இந்த திட்டம் குறித்து விவாதிப்பதற்கு தொழிற்சங்களுடனான கூட்டத்தை அறிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டம் ஆன்லைன் வழியில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து KSA (கேரள செயலாளரக ஊழியர் சங்கம்) தலைவர் எர்ஷாத் கூறுகையில், “ஐந்து நாள் வேலை ஒரு நல்ல யோசனை. ஆனால், பொது விடுமுறைகள் உட்பட ஊழியர்களின் உரிமைகள் குறைக்கப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்” என தெரிவித்தார். தொடர்ந்து, கேரள NGO சங்கத் தலைவர் ஜாஃபர் கான் A M கூறுகையில், ”இந்தக் கூட்டம் மிகவும் முக்கியமானது. இதனை, ஆன்லைனில் விவாதிக்கக் கூடாது. சரியான வரைவு முன்மொழிவுகளுடன் நேரடியான முறையில், விவாதிக்க வேண்டும். தொடர்ந்து, தேர்தல் நேரம் என்பதால் அரசு ஊழியர்கள் காலை முதல் மாலை வரை வேலை தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சமயத்தில் ஆன்லைனில் கூட்டம் நடத்துவது சரியாக இருக்காது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சிபிஎம் தொழிலாளர் அமைப்புகள் இந்த கூட்டத்தை வரவேற்றுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் வேலைத் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், கேரளாவும் வாரத்திற்கு 5 நாள் வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளப் போகிறதா அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது போல நிராகரிக்கப்படப் போகிறதா?., இதன் மூலம் ஏறத்தாழ உறுதிபடுத்தப்படும்.

