கேரளா போறீங்களா? அப்போ இதை மிஸ்பண்ணிடாதீங்க.. இனி இடுக்கி அணையை நடந்தபடி ரசிக்கலாம்..
இந்தியாவின் மாபெரும் "ஆர்ச்" வடிவ "இடுக்கி அணை"யின் பிரமாண்ட அழகை, இனி சுற்றுலா பயணிகள் நடந்து சென்றே பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, கோடை சீசனில் மட்டுமே அணையை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தற்போது பயணியர் வருகையை கருத்தில் கொண்டு நவம்பர் 30 வரை அனுமதி நீடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தியாவின் மாபெரும் "ஆர்ச்" வடிவ இடுக்கி அணை. குறவன், குறத்தி ஆகிய இரண்டு மலைகளை இணைத்து, பெரியாற்றின் குறுக்கே கடந்த 1976ம் ஆண்டு கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அணை, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,403 அடி உயரம் கொண்டது. "ஆர்ச்" வடிவ இடுக்கி அணையின் நீர் வெளியேற்ற மதகுகள் தவிர்த்து, செருதோணி என்ற ஒரு அணையும் அமைக்கப்பட்டுள்ளது, இடுக்கி அணையின் தனிச் சிறப்பாக அமைந்துள்ளது.
இந்நிலையில், ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பதியாக, கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்வையிட இடுக்கி அணையில் அனுமதி வழங்கப்பட்டது. இது தற்போது நீடிக்கப்பட்டு நவம்பர் 30ம் தேதி வரை மூன்று மாதங்கள் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை, அணையின் பாதுகாப்பு கருதி அணையில் நடந்து சென்று பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, கேரள மின்வாரியத்தின் ஹைடல் டூரிசம் சார்பில் இயக்கப்படும் பேட்டரி கார்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டு வந்தனர். ஆனால் இனிமேல், சுற்றுலா பயணிகள் இடுக்கி அணையில் நடந்து சென்றவாறே அதன் அழகை ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..
வரலாற்று சிறப்புமிக்க அணையின் பிரமாண்ட கட்டமைப்பு, கம்பீரம், வியக்க வைக்கும் அழகை கண்டு ரசிக்க இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான நடை பயண சுற்றுலா அனுமதி சீட்டை கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இதில் தினமும் 3750 பேர் அணையைப் பார்வையிட அனுமதிக்கப்படுகன்றனர்.
ஆன்லைன் மூலம் 2,500 பேரும் மீதமுள்ளோர் "ஸ்பாட் புச்கிங்" மூலமும் அணையை பார்வையிடலாம். அணையைப் பார்வையிடும் நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை. பெரியவர்களுக்கு 50 ரூபாயும் 14 வயதிற்குட்டட்ட குழந்தைகளுக்கு 30 ரூபாயும் கட்டணம் என நிர்ணயிக்கப்படுள்ளது.
www.keralahydeltourism.com என்ற இணைய தளம் மூலம் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்யலாம் என அணையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கேரள மின்வாரியம் தெரிவித்துள்ளது.

