கேரளா|சூச்சிபாரா நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் சிதறிய உடல்பாகங்கள்; ஹெலிகாப்டரை நாடும் மீட்புக்குழு!
செய்தியாளர் - மகேஷ்வரன்
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 360-ஐ கடந்துள்ள நிலையில், மாயமான 205 பேரை தேடும் பணி 6-ஆவது நாளாக தொடர்கிறது. நிலம்பூர் வனப்பகுதியில் மீட்புக் குழுவினரோடு வாக்கி டாக்கி நிபுணர்களும் தேடுதல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் கண்மூடி தூங்கியவர்களை மண்மூடிய துயரம் நீண்டுகொண்டே செல்கிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒவ்வொரு நாளும் மீட்கப்பட்டு வருகின்றன. சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் ஆறாவது நாளாக மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.
மலப்புரம் மாவட்டத்திலுள்ள நிலம்பூர் பகுதியில் ஓடும் சாலியாற்றிலும் தேடுதல் குழுவினர் உடல்களை தேடி அடர் வனப்பகுதிக்குள் சென்றனர். கடந்த 2 நாட்களில் வயநாடு மாவட்டத்தை விட, மலப்புரம் பகுதியில் உள்ள நிலம்பூர், சாலியாற்றில்தான் அதிக அளவில் உடல்கள் மீட்கப்பட்டுள்ன.
இதனையடுத்து, சாலியாற்றில் தேடும் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலம்பூர் பகுதியில் இருந்து வயநாடு மாவட்டத்தின் எல்லை வரை உள்ள வனப்பகுதிக்குள் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சாலியாற்றில் மொத்தம் 35 இடங்களில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேநேரத்தில், நிலம்பூர் வனப்பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் செல்போன் சிக்னல்கள் கிடைக்காமல் இருப்பதால் தேடுதல் குழுக்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் தேடுதல் குழுவினரும், அதிகாரிகளும் மிகவும் சிரமமடைந்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக வாக்கி டாக்கி உபகரணங்களை கையாள கூடிய 5 நிபுணர்கள் சென்றுள்ளனர். எவ்வளவு அடர் வனப்பகுதிக்குள் சென்றாலும் அவர்களை தொடர்பு கொள்ளும் வகையில் நவீன வாக்கி டாக்கிகளும் தேடுதல் பணிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
நிலம்பூர் வனப்பகுதிக்குள் சென்று தேடுதல் குழுவின் ஒருபகுதியினர், சூச்சிபாரா நீர்வீழ்ச்சியின் அடிவாரப் பகுதியில் உடல் மற்றும் உடல் பாகங்களை கண்டெடுத்துள்ளனர். அவற்றை தூக்கி கொண்டு வருவது சிரமம் என தெரிவிக்கும் மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டர் மூலம் மட்டும்தான் உடல்களை கொண்டு செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர்.

.png?rect=0%2C0%2C800%2C450&w=480&auto=format%2Ccompress&fit=max)