ரூ.2 மட்டுமே கட்டணம்.. மருத்துவம் பார்த்த கேரள டாக்டர் 80வது வயதில் மரணம்!
வடக்கு கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்தவர் ஏ.கே.ரைரு கோபால். மருத்துவரான இவர், ஏழைகளுக்கு உதவும் பொருட்டு, வெறும் ரூ.2 மட்டுமே வாங்கி அவர்களுக்கு மருத்துவச் சேவை செய்து வந்தார். பல ஆண்டுகளாக, அவர் ரூ.2 மட்டுமே வசூலித்து வந்தார். இது, அவருக்கு நீடித்த புகழையும் புனைபெயரையும் பெற்றுத் தந்தது. பின்னர், அவர் ரூ.40 முதல் ரூ.50 வரை வசூலித்தார். மருத்துவம் பெரும்பாலும் வணிகமயமாக்கப்பட்ட ஒரு நேரத்தில், அவர் அத்துறையில் தாராள மனப்பான்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக விளங்கினார். நோயாளி ஒருவர், அவரது வீட்டுக்குச் சென்றார். அந்த நோயாளியின் மோசமான நிலையைக் கண்ட பிறகு, மருத்துவரின் தன்னார்வச் சேவையில் அவரது பயணம் தொடங்கியது.
அன்று முதல் மிகவும் மலிவு விலையில் மருத்துவச் சேவையை வழங்க அவர் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார். குறிப்பாக தினசரி ஊதியம் பெறுபவர்கள், மாணவர்கள் மற்றும் ஏழைகளுக்காகவே இந்தச் சேவையைச் செய்து வந்தார். தொழிலாளர்களின் வேலை நேரத்தைப் புரிந்துகொண்டு, அதிகாலை 3:00 மணி முதலே மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். சில சமயங்களில் ஒருநாளைக்கு 300க்கும் மேற்பட்டோருக்குச் சிகிச்சை அளித்தார். மருத்துவச் சேவையைத் தவிர, அன்றாடப் பணிகளிலும் சுறுசுறுப்பு காட்டினார்.
அதிகாலை 2:15 மணிக்கு எழுவதுடன் வீட்டிலுள்ள பணிகளையும் பார்த்தார். முதலில் தனது மாடுகளைப் பராமரித்தல், கொட்டகையைச் சுத்தம் செய்தல் மற்றும் பால் சேகரித்தல், பால் விநியோகம், பிரார்த்தனை என அவரது பணிகள் வழக்கமாக இருந்தன. நோயாளிகளின் வரிசை பெரும்பாலும் நீண்டிருந்தாலும், அவற்றை நிர்வகிப்பதில் அவரது மனைவி சகுந்தலாவும் மற்றொரு உதவியாளரும் அவருக்கு ஆதரவளித்தனர். மேலும், அனைத்து மருந்து நிறுவன சலுகைகளையும் பிரதிநிதிகளையும் நிராகரித்தார். ஏழைகளுக்குக் குறைந்த விலை, பயனுள்ள மருந்துகளை மட்டுமே பரிந்துரைத்தார். தனது சகோதரர்களான டாக்டர் வேணுகோபால் மற்றும் டாக்டர் ராஜகோபால் ஆகியோருடன் சேர்ந்து, லாப நோக்கமின்றி குடும்பத்தின் மருத்துவச் சேவை பாரம்பரியத்தை ஏ.கே.ரைரு கோபால் தொடர்ந்தார்.
ஒருகட்டத்தில், அவரது உடல்நிலை காரணமாக, நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் அவரது அர்ப்பணிப்பு ஒருபோதும் தளரவில்லை. கண்ணூரில் மிகவும் மதிக்கப்படும் மருத்துவரான அவரது தந்தை டாக்டர் ஏ.கோபாலன் நம்பியார், அவருக்குள் விதைத்த இந்தப் பயணமே அவரையும் இப்படி வழிநடத்தியது. "பணம் சம்பாதிக்க வேண்டுமானால், வேறு ஏதாவது வேலை செய்" என அவர் தந்தை சொன்னதை வேதவாக்காகக் கருதி கடைசிவரை, ஏழை மக்களுக்குச் சேவை செய்வதைக் கொள்கையாக வைத்திருந்தார். அந்தச் சேவை மனப்பான்மை கொண்ட உள்ளம், இன்று கண்ணூர் மண்ணைவிட்டு விடைபெற்றுக் கொண்டது. ஆயினும் அவரது சேவை உலகம் முழுவதும் அவரைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. திசை முழுவதும் புகழ்பாட வைக்கிறது.