
கேரளாவில் இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அதி கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது
கேரளாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி கனமழை கொட்டித்தீர்த்தது. கோட்டயம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. கோட்டயம் கூட்டிக்கல், இடுக்கி, கொக்கையாறு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவிலும், மழை வெள்ளத்தாலும் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. இதனால் இந்த எட்டு மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காசர்கோடு நீங்கலாக இதர மாவட்டங்களுக்கு கன மழைக்கான 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 25ம் தேதி வரை மாநிலம் முழுக்க பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.