பிரியாணி கேட்ட 3 வயது குழந்தை.. அங்கன்வாடி உணவை மாற்றியமைத்த கேரள அரசு!
ஒரு குழந்தை அடம்பிடித்து கேட்டதற்காக ஒரு திட்டத்தையே மாற்றியிருக்கிறது கேரள அரசு.. அப்படி என்ன நிகழ்ந்தது தற்போது பார்க்கலாம்.. ஒரு மூன்று வயது சுட்டிப் பையன், அவனுக்கு உப்புமா பிடிக்கவில்லை என்பதற்காகப் பிடித்த அடம், கேரளாவின் அங்கன்வாடி உணவுப் பட்டியலையே புரட்டிப் போட்டிருக்கிறது. ஆம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷங்கு என்ற அந்த குட்டிக் கண்ணன், எனக்கு உப்புமா வேண்டாம், பிரியாணிதான் வேணும்... என்று அடம்பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஒட்டுமொத்த கேரள அரசின் கவனத்தையும் ஈர்த்தது.
ஷங்குவின் தாய், அவன் அடம் பிடிப்பதை வீடியோவாகப் பதிவு செய்து பகிர, அது காட்டுத் தீயாய் பரவியது. ஒரு குழந்தை, இவ்வளவு வெளிப்படையாகத் தன் விருப்பத்தைச் சொல்வதைக் கண்டு பலரும் ரசித்தனர். ஆனால், இந்த வீடியோவின் தீவிரம் சாதாரணமாக முடிந்துவிடவில்லை. கேரள சுகாதாரம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் பார்வைக்குச் சென்றது. உடனே செயல்பட்ட அமைச்சர், ஷங்குவின் கோரிக்கை தீவிரமாகப் பரிசீலிக்கப்படும், விரைவில் அங்கன்வாடி உணவு முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.
அமைச்சர் கொடுத்த வாக்குறுதி வெறும் வார்த்தைகள் அல்ல என்று நிரூபிக்கப்பட்டது. பத்தனம்திட்டாவில் நடைபெற்ற அங்கன்வாடி குழந்தைகள் சேர்க்கை விழாவில், அமைச்சர் வீணா ஜார்ஜ் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டார். சிறுவன் ஷங்குவின் கோரிக்கை ஏற்கப்பட்டுவிட்டது. இனிமேல், கேரள அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் முட்டை பிரியாணி அல்லது புலாவ் வழங்கப்படும்,
மேலும், வாரத்தில் 2 நாட்கள் வழங்கப்பட்டு வந்த பால் மற்றும் முட்டை, இனி 3 நாட்கள் வழங்கப்படும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த அறிவிப்பால், ஷங்குக்கு ஒரே கொண்டாட்டம்... தன் ஆசையை நிறைவேற்றிய அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு நன்றி சொல்லவும் சங்கு குட்டி மறக்கவில்லை. ஒரு குழந்தையின் பிரியாணி ஆசை, மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பசியாற்றும் அற்புதமான மாற்றத்திற்குக் காரணமாகியிருக்கிறது.