கேரளா | ”பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம்” - தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த ராகுல்!
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில் தான், கேரளாவில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிலான அரசாங்கம் நடைபெற்று வருகிறது. அங்கு எதிர்க்கட்சியாகவுள்ள காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மாநிலம் முழுவதும் புதுயுக யாத்திரை என்ற பெயரில் பரப்புரை மேற்கொண்டார். இந்த சுற்றுப் பயணத்துக்கான இறுதி நாள் நேற்று நடைபெற்றது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, நடைபெறவுள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளில் 5 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம். கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 நிதி உதவி. முதியோர் மற்றும் நலவாரிய ஓய்வூதியத் தொகை ரூ 3000 ஆக உயர்த்தப்படும். கேரளா மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பெயரில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 25 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க 5 லட்சம் ரூபாய் கடனும் வழங்கப்படும்” ஆகிய 5 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதியவர்களின் நலன்கள், திட்டங்களைச் செயல்படுத்த தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் ராகுல் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, இந்த வாக்குறுதிகள் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ”கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசாங்கம் பெருநிறுவனங்களுக்கு ஆதரவானதாக மாறிவிட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மோடியை கட்டுபடுத்துவதை போல முதலமைச்சர் பினராயி விஜயனை பிரதமர் மோடி கட்டுப்படுத்துகிறார். காங்கிரசுக்கு எதிராக சிபிஎம் மற்றும் பாஜக செயல்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

