கேரளா | ரூ.200 கோடி சொத்து.. மறைத்த பாஜக தலைவர்? கொளுத்திப் போட்ட காங்.. எரியும் தேர்தல் களம்!
நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், 140 சட்டசபை இடங்களைக் கொண்டிருக்கும் கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், ரூ.200 கோடி மதிப்புள்ள பங்களாவை கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவிக்கத் தவறிவிட்டார் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
தேர்தலையொட்டி, பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி, சந்திரசேகர் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.93 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த பிரமாணப் பத்திரத்தில், பெங்களூருவில் சுயமாகச் சம்பாதித்த சொத்து உட்பட, அவருடைய அசையாச் சொத்துக்களின் மதிப்பு ரூ. 15.07 கோடிக்கும் அதிகமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ரூ.107 கோடிக்கும் அதிகமான கடன்களும், அவரது மனைவிக்கு சுமார் ரூ. 1.62 கோடி கடன் இருப்பதும் அதில் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, அவருடைய வருமானமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவின் மிகவும் மதிப்புமிக்க பகுதிகளில் ஒன்றான கோரமங்கலாவில் 1.07 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள 49,000 சதுர அடி பங்களாவை சந்திரசேகர் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்று கேரள காங்கிரஸ் கமிட்டி குற்றம்சாட்டியுள்ளது. அப்பகுதியில் நிலவும் சந்தை நிலவரங்களின் அடிப்படையில், அந்த நிலத்தின் மதிப்பு தற்போது சுமார் 200 கோடி ரூபாயாக இருக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. மேலும், சந்திரசேகரின் 2024ஆம் ஆண்டு பிரமாணப் பத்திரத்திலும் அவரது வசிப்பிடமாக இதே முகவரி குறிப்பிடப்பட்டதாகவும், இதே முகவரியில் அவர் சொத்துக்கான வரி செலுத்தியதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது. மாநில அரசியலில் இவ்விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பாஜகவோ, ராஜீவ் சந்திரசேகரோ எந்தப் பதிலும் அளிக்கவில்லை. நேமம் தொகுதியில் போட்டியிடும் ராஜீவ் சந்திரசேகர், சிபிஐ(எம்) தலைவரும் மாநில கல்வி அமைச்சருமான வி. சிவங்குட்டி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ். சபரிநாதன் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

