கேரளா | ராஜீவ் முதல் நவ்யா வரை.. முக்கியத் தலைவர்களைக் களமிறக்கிய பாஜக.. முதல் பட்டியல் வெளியீடு!
140 சட்டசபை இடங்களைக் கொண்டிருக்கும் கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மாநிலத்தில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில், பல முக்கியத் தலைவர்களுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. இதில் பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் முதல் பிரியங்கா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட நவ்யா வரை பலருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி (யூனியன் பிரதேசம்) ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில், 140 சட்டசபை இடங்களைக் கொண்டிருக்கும் கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், கேரளத்தில் 47 இடங்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில், பல முக்கியத் தலைவர்களுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. முக்கிய வேட்பாளர்களில் மாநிலக் கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர், நேமம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார். இந்தத் தொகுதியில் பாஜக மற்றும் சிபிஐஎம் இடையே நேரடிப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் வி. முரளீதரன் கஜக்கோட்டம் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் சிபிஐஎம், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல தொகுதிகளில் மூத்த தலைவர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக தலைவர் கே.சுரேந்திரன் மஞ்சேஷ்வரிலும், ஷோபா சுரேந்திரன் பாலக்காடு தொகுதியிலும், வட்டியூர்காவு தொகுதியில் பாஜக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர். ஸ்ரீலேகாவும் போட்டியிடுகின்றனர்.
மற்றொரு முக்கிய வேட்பாளர் பத்மஜா வேணுகோபால். இவர், முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.கருணாகரனின் மகள் மற்றும் காங்கிரஸ் தலைவர் கே.முரளீதரனின் சகோதரி ஆவார். இவர், திருச்சூர் தொகுதியில் பாஜகவால் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர, 2024 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி வதேராவை எதிர்த்து வயநாட்டில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸுக்கும் கட்சி டிக்கெட் வழங்கியுள்ளது.
அவர், கோழிக்கோடு வடக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். பாஜகவின் இந்த முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலால், கேரளத்தில் காங்கிரஸ் மற்றும் சிபிஐஎம் ஆகிய 3 கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில் சிபிஐஎம் 86 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. அதில், 56 சிட்டிங் எம்எல்ஏக்களையும் மீண்டும் பரிந்துரைத்துள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார்.

