தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு வழக்குகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்ததாக கூறி கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு எதிராக அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
கேரளா சார்பில் தொடரப்பட்ட வழக்கில், “ஒரு மசோதாவிற்கு குறிப்பிட்ட அல்லது தேவையான கால வரம்பிற்குள் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே தமிழக அரசின் சார்பில் 198 பக்க அளவில் மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அதில் மசோதாக்கள் கொண்டு வரப்பட்ட தேதி, எந்தெந்த மசோதாக்கள் நிலுவையில் உள்ளது என்பது குறித்தெல்லாம் விளக்கப்பட்டிருந்தது. அதேபோல் விரிவான அறிக்கை மூலம் கேரள அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
வரக்கூடிய 20 ஆம் தேதிக்கு பின் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது ஆளுநர் தரப்பினர் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், ஏன் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்ற காரணத்தை விளக்குவார்கள்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கெனவே கொடுத்திருந்த நேர்காணல் ஒன்றில், “சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் வைத்திருந்தால் அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம்” என்ற விளக்கத்தை கொடுத்திருந்தார். இருப்பினும் நீதிமன்றத்தில் எம்மாதிரியான விளக்கத்தை கொடுக்கின்றனர் என்பதைப் பொருத்துதான் இவ்விஷயத்தை மேற்கொண்டு அனுகமுடியமென அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில்தான் கேரள அரசும் இதுபோன்றதொரு முடிவை எடுத்துள்ளது.
கேரளா அரசு அம்மாநில ஆளுநருக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்குமா அல்லது இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்குமா என்பது வரக்கூடிய நாட்களில்தான் தெரிய வரும்.