”கறுப்பாக இருக்கிறாய்” - நிறத்தைக் கேலிசெய்த மாமியார்.. கர்நாடக இளம்பெண் துயர முடிவு!
மனிதனின் வாழ்வில் நிறம் முக்கியப் பங்கு விகிக்கிறது. அனைத்து நிறங்களும் சமமானதே. அதேபோன்றுதான் கறுப்பு நிறம். ஆனால், நிறத்தை கொண்டு மனிதர்களை இழிவாக பார்க்கும் பழக்கும் இன்றளவும் பல நாடுகளில் இருந்து வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்றளவும் கருப்பின மக்கள் பிரச்னை எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்தியா போன்ற நாடுகளிலும் அவ்வப்போது நிறப் பிரச்னை எழுகிறது. சமீபத்தில்கூட, கறுப்பு நிறம் பற்றி விமர்சனம் செய்யப்பட்டதற்கு கேரள தலைமைச் செயலர் சாரதா முரளிதரன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தன் நிறத்தைக் கேலி செய்த மாமியாரால் இளம்பெண் ஒருவர், தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பல்லாரியைச் சேர்ந்தவர், பூஜா அய்யங்கவுடர் (24). இவருக்கும் பெட்கேரி-கடக், ஷரணபசவேஷ்வர் நகரில் வசிக்கும் அமரேஷ் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இந்த நிலையில், திருமண நாளில் இருந்து மாமியார் குடும்பத்தினர் பூஜாவின் நிறத்தைக் காரணம் காட்டி குறை கூறி வந்துள்ளனர். அதாவது, பூஜா கறுப்பு நிறம் உடையவர் என்று கூறப்படுகிறது. இந்த நிறத்தைவைத்து, அவரை கிண்டலடித்தும் தரக்குறைவாகவும் பேசி வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். பூஜாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இவ்விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி, “பூஜாவின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த மாமியார் மற்றும் கணவரின் மூத்த சகோதரர் வீரனகவுடா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷாபூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அமரேஷ், அங்கிருந்து வேறு இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டவுடன், பூஜாவை தன்னுடன் அழைத்துச் செல்ல இருந்தார்” போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.