பெங்களூரு | பள்ளி பேருந்தில் மகனை ஏற்றிய தாய் மின்சாரம் தாக்கி பலியான சோகம்!
பெங்களூரில் பள்ளி பேருந்தில் மகனை ஏற்றியத்தாய் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூரை அடுத்த கல்புர்கியில் பாக்யஸ்ரீ என்ற பெண்மணி, தனது மாற்றுத்திறனாளி மகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக நேற்றுக் காலை காலை 9.30 மணியளவில் பள்ளிப்பேருந்திற்காக காத்து நின்றுள்ளார். சிறிது நேரத்தில் வழக்கம்போல் பள்ளி பேருந்து வரவும், பாக்ய ஸ்ரீ தனது மகனை பள்ளி பேருந்தில் ஏற்றியுள்ளார். அச்சமயம், அங்கு அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பி ஒன்று அப்பெண்மணி மீதும், மாணவர் மீது உரசியதில், இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் பாக்கியஸ்ரீ உடலில் பாய்ந்த மின்சாரத்தால் அவர் உடலில் தீப்பொறி ஏற்படவும் சுற்றியுள்ளவர்கள் அவர்களை காப்பாற்ற தயங்கியுள்ளனர். இருப்பினும் சிலர் பஸ்ஸை அவ்விடத்தை விட்டு அகற்றுமாறு கூறவே... உடனடியாக பள்ளி பேருந்து ஓட்டுனரும் பஸ்ஸை அங்கிருந்து கிளப்பி இருக்கிறார். அதனால் மின்சார கம்பியும் பாக்கியஸ்ரீ உடலை விட்டு அகன்றுள்ளது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் பாக்யஸ்ரீயையும் அவரது மகனையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பாக்யஸ்ரீ உயிரிழந்த நிலையில், அவரது மகன் அபாயக்கட்டத்தை தாண்டி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிசிடிவியில் பதிவான இச்சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு பாக்யஸ்ரீ குடும்பத்தினர் மின்சாரத்துறையின் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.