கார் ஓட்டும்போது தூங்கிய டிரைவர் - பள்ளத்தில் விழுந்து விபத்து..!
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகாவில் உள்ள பர்லட்கா என்ற இடத்தில் கார் பள்ளத்தில் விழுந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதி மக்களுடன் இணைந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்தவர்கள் அன்னு நாயக், சித்தானந்தா, ரமேஷ் நாயக் என்பது தெரிய வந்துள்ளது மேலும் இவர்கள் சுல்யா தாலுகாவில் உள்ள ஜட்டிபல்லா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சூளையில் இருந்து புத்தூர்க்கு சென்றபோது, ஓட்டுநர் தூங்கியதை அடுத்து கார் பள்ளத்தில் விழுந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து புத்தூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.