கர்நாடகா | கமல்ஹாசனுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - உருவ பொம்மை எரிப்பு
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
நடிகர்கள் கமல், சிம்பு நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்' என்று தெரிவித்தார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி, தொடர்ந்து ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கன்னட அமைப்பினரும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் இதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கூற முடியாது என தெரிவித்துள்ளார். இந்நிலையில், கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து தன் பேச்சுக்கு நடிகர் கமல் மன்னிப்பு கேட்காமல், முரண்டு பிடிக்கிறார். இனியும் அவர் இதே மனப்போக்கை தொடர்ந்தால், கர்நாடகாவின் எந்த திரையரங்கிலும் அவர் நடித்த 'தக் லைஃப் திரைப்படத்தை திரையிடக் கூடாது. இதற்கு நாங்கள் வாய்ப்பளிக்கமாட்டோம். ஒருவேளை திரையிட்டால், அந்த திரையரங்கிற்கு தீ வைப்போம் என நாராயண கவுடா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லரியில் கன்னட அமைப்பினார் 50க்கும் மேற்பட்டோர் கமல்ஹாசன் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், எட்டி உதைத்ததோடு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கமலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு மடாதிபதிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர் முன்னதாக ஊர்வலமாகச் சென்று கமல்ஹாசன் உருவ பொம்மையை எரித்து கமல்ஹாசனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் அதேபோல் விஜயபுரவில் கமல்ஹாசன் உருவ பொம்மை மற்றும் பேனரை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் ராயச்சூர், சிக்கப்பல்லபுர பகுதிகளிலும் கமல்ஹாசனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்