கர்நாடகா | ”மரணத்திற்கும் கோவிட் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை” - மாநில அரசு நிபுணர் குழு!!
கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் மட்டும் 21 பேர் மாரடைப்பால் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்ட முதல்வர் சித்தராமையா, கொரோனா தடுப்பூசி இம்மரணங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அத்தடுப்பூசி உரிய முறையில் பரிசோதிக்கப்படாமல் அவசரஅவசரமாக பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் குறித்து மத்திய அரசு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. எய்ம்ஸ் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி கழகம் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் இறுதியில், கொரோனா தடுப்பூசிக்கும் திடீரென ஏற்படும் மாரடைப்புகளுக்கும் நேரடி தொடர்பில்லை. கொரோனா தடுப்பூசி கோடிக்கணக்கான உயிரிழப்புகளை தடுத்தது என்பதே உண்மை எனத் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு மரணங்களுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என மாநில அரசு நியமித்த நிபுணர் குழு கூறியுள்ளது. மற்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளும் இதையே கூறுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புகைப்பிடித்தல், வாழ்க்கை முறை மாறுபாடு போன்றவை மரணங்களுக்கு காரணமாக இருக்கலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என கூறியதற்காக மருத்துவ விஞ்ஞானிகளிடம் கர்நாடக முதல்வர் சித்தராமையா மன்னிப்பு கோரவேண்டும் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார். சில வெளிநாட்டு சக்திகளின் வழிநடத்தலின் பேரில் அவர் இவ்வாறு பேசினாரா என்ற சந்தேகமும் இருப்பதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.