கொவிட்-19 தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் ஆய்வு!
கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் மட்டும் 21 பேர் மாரடைப்பால் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் அதிகமான இளைஞர்களே இறந்துள்ளனர். தரவுகளின்படி, மாரடைப்பால் இறக்கும் மக்களில் 62 சதவீதம் பேர் 45 வயதுக்குட்பட்டவர்கள். இதில், 5 பேர் 19 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். இதுதவிர, கடந்த ஜூன் 30ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் 3 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்ட முதல்வர் சித்தராமையா, கொரோனா தடுப்பூசி இம்மரணங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அத்தடுப்பூசி உரிய முறையில் பரிசோதிக்கப்படாமல் அவசரஅவசரமாக பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் குறித்து மத்திய அரசு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. எய்ம்ஸ் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி கழகம் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 47 மருத்துவமனைகளில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. பல்வேறு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அந்த ஆய்வின் இறுதியில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எய்ம்ஸ் மருத்துவமனையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் தனித்தனியே நடத்திய விரிவான ஆய்வில் கொரோனா தடுப்பூசிக்கும் திடீரென ஏற்படும் மாரடைப்புகளுக்கும் நேரடி தொடர்பில்லை எனத் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சரியான காரணம் தெரியாத திடீரென்று ஏற்படும் மரணங்களுக்கு வெளியே தெரியாத மருத்துவ பிரச்னைகள், பரம்பரை உடல் கோளாறுகள், தவறான வாழ்க்கை முறைகள் காரணமாக இருக்கலாம் என்பது அந்த ஆய்வில் தெரியவந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கோடிக்கணக்கான உயிரிழப்புகளை தடுத்தது என்பதே உண்மை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
முன்னதாக இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. அதன்படி கொரோனா உயிரிழப்பையும், திடீர் மாரடைப்பையும் தொடர்புபடுத்துவது பொது மக்களை தவறாக வழிநடத்தும் செயல் என்றும், இதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது.