தமிழ்நாடு, கேரளா வரிசையில் கர்நாடகா.. மாநில உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்த ஆளுநர்!
கர்நாடக மாநில சட்டமன்றத்தில் இன்று நிகழ்த்திய வழக்கமான உரையின் சில பகுதிகளைப் படிக்க மறுத்து, அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட உரையில் ஜி ரேம் ஜி சட்டம் பற்றிய குறிப்புகளை ஆட்சேபித்து அவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.
சட்டசபைகளில் ஆளுநர் மாநில அரசுகள் தயாரிக்கும் உரையை வாசிக்காமல் வெளியேறும் நிகழ்வுகள் சமீபகாலமாக அதிகம் அரங்கேறி வருகிறது. நடப்பு ஆண்டில் முதல் சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படாததால், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார். பின்னர் வெளியிடப்பட்ட ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில், ’அரசு ஊழியர்களின் குறைகளை தீர்ப்பதற்கான அம்சங்கள் உரையில் இல்லை. தமிழக அரசுத் துறையில் கீழ்மட்ட ஊழியர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது’ என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில், ’ஆளுநர் உரையோடு அவை தொடங்க வேண்டும் என்ற பேரவை விதியை அரசியல் அமைப்பில் திருத்த முயல்வோம். நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவர பிற மாநில கட்சிகளோடு சேர்ந்து திமுக நடவடிக்கை எடுக்கும்’என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதேபோல், அண்டை மாநிலமான கேரளாவிலும் அரங்கேறியது. கேரள சட்டசபையின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரின்போது, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரின் உரையுடன் தொடங்கியது. இருப்பினும், உரை வாசிப்பின்போது சில முக்கியப் பகுதிகளை ஆளுநர் தவிர்த்தது சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநில அரசு தயாரித்துக் கொடுத்த 60-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட உரையில், மத்திய அரசை விமர்சிக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்தார். ஆளுநரின் இந்தச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் தவிர்த்த அந்தப் பகுதிகள் அனைத்தையும் சபையில் தானே வாசித்துக் காட்டினார். இதேபோல், தற்போது கர்நாடகாவிலும் அரங்கேறியுள்ளது. கர்நாடகாவில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட் உள்ளார்.
இந்த நிலையில், மாநில சட்டமன்றத்தில் இன்று நிகழ்த்திய வழக்கமான உரையின் சில பகுதிகளைப் படிக்க மறுத்து, அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட உரையில் ஜி ரேம் ஜி சட்டம் பற்றிய குறிப்புகளை ஆட்சேபித்து அவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA) கட்டமைப்பை மாற்றியமைத்த சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தைக் குறிப்பிடும் குறிப்பிட்ட பத்திகளுக்கு கெலாட் ஆட்சேபனை தெரிவித்தார், அந்த உரை அரசாங்க பிரச்சாரத்திற்குச் சமம் என்று வாதிட்டார். ஆளுநரின் வெளிநடப்பை முதல்வர் சித்தராமையா கடுமையாகச் சாடினார்.
”ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றுவது ஆளுநரின் கடமை. ஆளுநர் உரையின் உள்ளடக்கங்களை அமைச்சரவை அங்கீகரித்திருந்தது. அமைச்சரவை ஒப்புதல் அளித்த உரையை ஆளுநர் படிக்கவில்லை, அதற்கு பதிலாக அவர் தயாரித்த உரையை வாசித்தார். அவர் அரசியலமைப்பை மீறிவிட்டார். கெலாட் தனது அரசியலமைப்பு பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார். கவர்னர் மத்திய அரசின் ஒரு கருவியாகச் செயல்படுகிறார், இது அரசியலமைப்பிற்கு விரோதமானது. ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து நாங்கள் முடிவு செய்வோம்" என விமர்சித்தார்.

