கர்நாடகா| முதல்வர் சித்தராமையாவின் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர்!
கர்நாடகாவில் 2023இல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், மாதம் இரண்டாயிரம் ரூபாய் என்பன உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்தது. தொடர்ந்து, அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியிலிருந்து சித்தராமையா முதல்வரானார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும், திட்டங்களும் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் கிருஹலட்சுமித் திட்டம், பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வழங்கும் சக்தித்திட்டம் போன்றவை கர்நாடக அரசின் முக்கியத் திட்டங்களாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உத்தர கன்னடா அருகே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் தேஷ் பாண்டே, இலவச வாக்குறுதி திட்டங்களால், பிற வளர்ச்சிப் பணிகளுக்கு நிதியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். மாநிலத்தின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட பாண்டே, வாக்குறுதி திட்டங்கள் எல்லாமே வீண்தான் என்று கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து, மகளிர் இலவசப் பயணம் போன்ற திட்டங்களால் ஆண்களால் பேருந்துகளில் செல்ல சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இதுவே முதல்வர் சித்தராமையாவின் திட்டங்கள் எனத் தெரிவித்தார். இவ்வாறு, ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரே அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சித்திருப்பது கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.