கர்நாடகா | அடிக்க முயன்ற முதல்வர்.. விரக்தியில் எஸ்.பி. ராஜினாமா. சமரசம் செய்த அதிகாரிகள்!
கர்நாடகாவில் மத்திய அரசைக் கண்டித்து பெலகாவியில், கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பெண்கள் சிலர் கூட்டத்தில் புகுந்து கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதைப் பார்த்துக் கோபமடைந்த சித்தராமையா, அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த தார்வாட் கூடுதல் எஸ்பி நாராயண பரமானியை நோக்கி, "ஏய், இங்கே வா, எஸ்பி யார்? நீங்க என்ன பண்றீங்க?" என்று கேட்டு அந்த அதிகாரியை அடிப்பதற்கு கை ஓங்கினார். ஆனால், அப்படியே நிறுத்திக்கொண்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. பொது மேடையில் முதல்வர் சித்தராமையா நடந்துகொண்ட விதம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் தன்னை முதல்வர் அடிக்க வந்ததால், இரண்டு மாத மன உளைச்சலில் இருந்த தார்வாட் கூடுதல் எஸ்பி நாராயண பரமானி தற்போது விருப்ப ஓய்வு பெற கடிதம் அளித்திருந்தார். அதில் அவர், "முதலமைச்சரோ அல்லது அவரது அரசாங்கத்தின் அதிகாரியோ அல்லது எனது துறையின் அதிகாரியோ என்னை ஆறுதல்படுத்த முயற்சிக்கவில்லை. நான் மிகவும் துயரமடைந்தேன். என் மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணீர் விட்டனர். ஆனால் எல்லாவற்றையும் மீறி நான் பணிக்குத் திரும்ப பலத்தை சேகரித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதற்கு மீண்டும் விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கிடையே, கடிதம் வைரலாகிய அடுத்த 48 மணி நேரத்தில் முதல்வர், உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பேரில் அவர் நேற்று மீண்டும் பணிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பரமானி, “நான் என் மேலதிகாரிகளிடம் இதுதொடர்பாகப் பேசினேன். அவர்களும் என்னிடம் பேசினார்கள். முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரும் அவ்வாறே செய்தனர். அதன் பிறகு நான் பணிக்கு வர முடிவு செய்தேன். முதலமைச்சரை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.