கர்நாடகா | போலீசாரின் வாகன சோதனையில் நேர்ந்த விபரீதம் - 4 வயது சிறுமி உயிரிழப்பு
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், மத்தூர் தாலுகாவின் கொரவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அசோக் (32). - வாணி (27) தம்பதியர். இவர்களது மூன்றரை வயது ,மகள் ஹிருதீக்ஷாவை தெரு நாய் கடித்துள்ளது. இதையடுத்து காயமடைந்த மகளை பைக்கில் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்..
அப்போது மத்தூர் சாலையில் போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது, குழந்தையுடன் சென்ற அசோக்கின் இருசக்கர வாகனத்தை திடீரென போலீசார் வழிமறித்தனர். இதனால் நிலை தடுமாறி, மூவரும் கீழே விழுந்தனர். இதில், சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, குழந்தையின் பெற்றோரும் பொதுமக்களும் மண்டியா மாவட்ட மருத்துவமனை முன் நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன பாலதண்டி உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது தொடர்பாக, மண்டியா போக்குவரத்து காவல் நிலையத்தைச் சேர்ந்த ஜெயராம், நாகராஜு மற்றும் குருதேவ் ஆகிய 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு, போக்குவரத்து போலீசாரின் கெடுபிடியே காரணம் என, அப்பகுதியினர் குற்றம்சாட்டினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.