பாஜகவின் டெல்லி துணைத் தலைவராகும் கபில் மிஸ்ரா!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கபில் மிஸ்ரா 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருடன் ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவர் ரிச்சா பாண்டேவும் பாஜகவில் இணைந்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டது. அதில் முக்கிய நிர்வாகிகள் சிலர் நீக்கப்பட்டிருந்தனர். மட்டுமன்றி 13 துணைத்தலைவர்களும் 9 பொதுச்செயலாளர்களும் 13 செயலாளர்களும் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில் பொதுச்செயலாளர்களாக சி.டி.ரவி, திலீப் சைகியா, உத்தரப் பிரதேசத்தின் வினோத் போன்றோர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து டெல்லி பாஜக தலைவராக செயல்படும் வீரேந்திர கச்சேத்வா, “அறிவிக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலில் கபில் மிஸ்ராவின் பெயர் இருக்கிறது. சில காரணங்களால் அதை அறிவிக்க இயலாத சூழல் இருக்கிறது” என தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது கபில் மிஸ்ரா பாஜகவின் டெல்லி பிரிவுத் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு பாஜகவில் கபில் மிஸ்ரா இணைந்ததில் இருந்து அவருக்கு எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை. 2020 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்திருந்தார். தனது ட்விட்களால் அடிக்கடி சர்ச்சைகளிலும் பிற கட்சித் தலைவர்களின் கண்டங்களுக்கும் உள்ளானவர் கபில் மிஸ்ரா. குடியுரிமைச் சட்டத்திருத்தம் மற்றும் சிஏஏவிற்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்த போராட்டங்களில், அச்சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களுக்கும் சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு எதிராக வழக்கறிஞர் குழுவொன்று காவல்துறையில் அவர்மேல் வழக்கு தொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.