கர்நாடகா | 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக முன்னணி நடிகை கைது! விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தற்போது தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், இன்று அவரிடமிருந்து 14.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகள், அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் வந்த நடிகை ரன்யா ராவ், நேற்று இரவு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நடிகை ரன்யா ராவ், அடிக்கடி துபாய் சென்றதைத் தொடர்ந்து, DRI அதிகாரிகள் நடிகையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்துள்ளனர். அதன்பேரிலேயே நடிகை தங்கக் கடத்தலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தற்போது அவரைக் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார், கர்நாடகாவில் பணியாற்றும் ஒரு IPS அதிகாரியின் நெருங்கிய உறவினர் என நடிகை தெரிவித்ததாகவும், அவர் எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் பெரும்பாலான தங்கத்தை அணிந்திருந்தாகவும், மேலும் அவர் துணிகளில் தங்கக் கட்டிகளையும் மறைத்து வைத்திருந்தார் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள், “ஒவ்வொரு முறையும் அவர் விமான நிலையத்தில், ’தான் DGPயின் மகள்’ என்று கூறிவிட்டுச் செல்வார். பின்னர் வெளியே சென்றவுடன், காவல்துறையினரைப் பாதுகாப்புக்கு அழைத்துச் செல்வார். காவல்துறையினர் அவரை வீட்டில் இறக்கிவிடுவார்கள்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், நடிகைக்கு உதவிய காவல் துறையினருக்கும் IPS அதிகாரிக்கும் ஏதேனும் பங்கு உள்ளதா அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்கள் அவற்றை தவறாகப் பயன்படுத்தினார்களா என்பதை DRI அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் நடிகை இதற்கு முன்பும் தங்கத்தை கடத்தி வந்தாரா என்பதையும் அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். கடந்த 15 நாட்களில் நான்கு முறை துபாய் சென்று பெங்களூரு திரும்பிய நடிகைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, டிஆர்ஐ அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு, அவர் குறித்த தகவல்களை சேகரித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் அவர் ஏதேனும் கும்பலைச் சேர்ந்தவரா என்று அதிகாரிகள் தீவிரமாய் விசாரித்து வருகின்றனர்.