இந்தியா கூட்டணியில் நாங்க இல்லை! அதிரடியாக பேசிய கனிமொழி எம்.பி.. பரபரக்கும் அரசியல் களம்!
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க உருவாக்கப்பட்ட கூட்டணிதான் இந்தியா கூட்டணி. கடந்த 2023 ம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்தக் கூட்டணியை ஒருங்கிணைப்பதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முக்கியப் பங்காற்றி இருந்தார். இந்நிலையில், காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது திமுக. அந்தத் தேர்தலின் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமையாத நிலையில், பெரும்பான்மை பெற்றிருந்த தவெகவுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து, 2 அமைச்சர் பதவிகளையும் காங்கிரஸ் பெற்றது.
இந்தத் தேர்தலுக்குப் பிந்தய கூட்டணியை திமுகவில் பலரும் காங்கிரஸ் தனது துரோக முகத்தை மீண்டும் காட்டியதாக விமர்சித்திருந்தனர். இதற்கு காங்கிரஸ் தரப்பிலும், “அரசியலில் எதுவுமே நிரந்தரம் இல்லை” என பதிலளித்திருந்தது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அருகில் அமர விருப்பம் இல்லை எனவும், இருக்கையை மாற்ற வேண்டும் எனவும் திமுக சார்பில் நாடாளுமன்ற சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் வெவ்வேறு இருக்கைகளை ஒதுக்கித் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கூட்டணியில் இருந்து விலகி திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் பேச்சுகள் அடிபட்டு வந்தன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் கனிமொழி பங்கேற்றிருந்தது பேசுபொருளானது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தேநீர் விருந்தில் கலந்து கொண்டது சர்ச்சையாகும் அளவுக்கு என்ன இருக்கிறது? இருக்கை மாற்றம் குறித்து பேசவே சென்றதாக” கூறியிருக்கிறார். அப்போது இந்தியா கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியபோது, “இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை, காங்கிரஸ் மட்டும் தான் இருக்கிறது” என அதிரடியாகக் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக பேச்சுகள் அடிபட்டு வந்த நிலையில், கனிமொழி அதிரடியாக தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் தேனீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணித்திருந்த நிலையில் குடியரசு தலைவர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் காங்கிரெஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சோனியா காந்தி கலந்து கொண்டது குறிப்பிட தக்கது. இந்நிலையில், இந்தியா கூட்டணியின் மாபெரும் பலமாக இருந்த திமுக அதிலிருந்து விலகுவது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர

