Headlines | நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி முதல் கனமழைக்கு வாய்ப்பு வரை
பிரிட்டன் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பாரக்கப்படுகிறது.
இந்திய தேர்தல்களில் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். பீகாரில் எளிய மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிரொலித்த ஆபரேஷன் சிந்தூர், வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரங்கள் உள்ளிட்ட தொடர் அமளியால் 3ஆவது நாளாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கலந்துரையாடிய முதல்வர், மருத்துவமனையில் இருந்தபடியே 3 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திமுக பாதி விழுங்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். விசிக வளர்ச்சி அடைந்துள்ளதே தவிர, வீழ்ச்சியடையவில்லை என அதற்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மதுரையில் 3 கோடியே 75 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5 பேரை கைது செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
காஸாவில் பட்டினியால் 80 குழந்தைகள் உட்பட 110 பேர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்தி உயிர்களை காப்பாற்றக் கோரி இஸ்ரேல் மக்கள் நெதன்யாஹூ அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்தியா, பாகிஸ்தான் போரை நான் தடுத்திருக்காவிட்டால் அணுஆயுத யுத்தமாக மாறியிருக்கும் என 25ஆவது முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.