ராஜீவ் காந்தியின் கடைசி பேட்டி.. நினைவுகூர்ந்த பத்திரிகையாளர்!
கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட நிகழ்வு, ஆறாத வடுவாகவே இருந்து வருகிறது. படுகொலைக்கு சில மணி நேரத்திற்கு முன், சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் வழியில், ராஜீவ் காந்தி தனக்கு காரில் வைத்து பேட்டியளித்ததாக கூறி உள்ளார் பத்திரிகையாளர் நீனா கோபால். அப்போது, தேர்தல் பிரசாரம், அன்றைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசியதாக நினைவுகூர்ந்துள்ளார். அந்தச் சந்திப்பின்போது ராஜீவ் காந்தி மிகவும் சாதாரணமாகவும், நம்பிக்கையுடனும் காணப்பட்டதாக தெரிவித்தார். காரில் நடந்த 45 நிமிட உரையாடலில், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையின் சாத்தியக்கூறுகள் குறித்தும் ராஜீவ் காந்தி பேசியதாக கூறி உள்ளார் நீனா கோபால். தனது அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளைத் தவிர்த்து, அதிகாரமிக்க தெற்காசியத் தலைவர்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து மனம் திறந்த ராஜீவ் காந்தி, சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்தவர்கள் குறிவைத்து கொல்லப்பட்டதாக கூறியிருந்தார்.
தனது தாய் இந்திரா காந்தி தொடங்கி, ஷேக் முஜிப், சுல்ஃபிகர் அலி புட்டோ, பண்டாரநாயக்கா ஆகியோரின் பெயர்கள் வரை ராஜீவ் காந்தி குறிப்பிட்டதாக நீனா கோபால் தெரிவித்துள்ளார். இந்த உரையாடல் முடிந்து சில நிமிடங்களிலேயே, அந்த பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக நீனா கோபால் கூறியுள்ளார். ராஜீவ் காந்தி அமைதியான முகத்துடன் தரையில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ள அவர், ராஜீவ் காந்தியின் மெய்க்காவலர் பிரதீப் குப்தாவும் அங்கேயே பலியானதாகவும் கூறியுள்ளார். ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில், உயிருடன் இருந்தவர்களின் அழுகுரல் நீனா கோபாலின் நினைவில் இன்றும் நீங்காமல் நிற்கிறது. ராஜீவ் காந்தி மரணமடைந்து 34ஆம் ஆண்டுகள் ஆகும் நிலையில், அவரது கடைசிப் பேட்டி குறித்த இந்த நினைவுகள், அப்போதைய அரசியல் சூழல், பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் இந்தத் துயரமான நிகழ்வு எவ்வாறு இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைத்தது என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்துகின்றன.