பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கும் சமூக வலைத்தளபதிவுகளுக்காக 'தேகாஷ்மிர்வாலா' என்ற ஆன்லைன் செய்தி இதழின் தலைமை ஆசிரியர் ஃபஹத் ஷா கைது செய்யப்பட்டார் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புல்வாமாவில் உள்ள மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில ஃபேஸ்புக் பயனர்கள் மற்றும் இணையதளங்கள், தேச விரோதமான புகைப்படங்கள், வீடியோக்கள், பதிவுகள் உள்ளிட்டவற்றை பொதுமக்களிடையே பரப்பி சட்டம் ஒழுங்கினை சீர்குலைத்து அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் குற்ற நோக்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் 'தேகாஷ்மிர்வாலா' என்ற ஆன்லைன் செய்தி இதழின் தலைமை ஆசிரியர் ஃபஹத் ஷா, நாட்டிற்கு எதிரான தவறான எண்ணம் மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, சட்ட அமலாக்க முகமைகளின் பிம்பத்தையும் சிதைத்தார்
இந்த விவகாரம் தொடர்பான விசாரணையின்போது, ஃபஹத் ஷா கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 ஆம் தேதி ஃபஹத் ஷா காவல்துறையினரால் புல்வாமா காவல் நிலையத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அழைக்கப்பட்டார், அதன்பிறகு அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் அறிக்கையை காவல்துறை வெளியிட்டது.
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி தலைவருமான மெகபூபா முப்தி, “உண்மைக்காக நிற்பது தேச விரோதமாக கருதப்படுகிறது. ஆழ்ந்த சகிப்புத்தன்மையற்ற மற்றும் சர்வாதிகார அரசாங்கத்திற்கு கண்ணாடியைக் காட்டுவதும் தேசவிரோதமாகும். ஃபஹத்தின் பத்திரிகைப் பணி என்பது மத்திய அரசுக்கு அதன் விரும்பத்தகாத அடிப்படை யதார்த்தத்தை வெளிக்காட்டுகிறது. எத்தனை ஃபஹத்களை கைது செய்வீர்கள்?” என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்