ஜம்மு - காஷ்மீர்: ராணுவத்தினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 3 பேர் சடலமாக மீட்பு!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் ரோஜரி பகுதியில் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 3 பேர் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்pt web

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் மர்மநபர்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல்களை அடுத்து ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை ராணுவ வீரர்கள் பயணித்த வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலத்த காயங்களுடன் 5 ராணுவ வீரர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் கிளை அமைப்பான PAFF எனப்படும் மக்கள் பாசிச விரோத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நிலையில் அப்பகுதிகளில் மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. கண்காணிப்பு பணிகளில் ஈடுபட கூடுதலாக படைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வான்வழிக் கண்காணிப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் பாஃப்லியாஸ் என்ற இடத்தில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் மக்கள் தொடர்புத் துறை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களுக்கு இழப்பீடும் அவர்களது உறவினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மூத்த அரசு அதிகாரிகளின் தலைமையில் அவர்களது சொந்த ஊரில் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறந்தவர்கள் சபீர் உசேன் (44), ஷோகேட் அலி (22), ஷபீர் உசேன் (32) போன்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரோ ராணுவத்தினரை குற்றம் சாட்டுகின்றனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள ஷோகெட் அலியின் உறவினர் முகம்மது சதீக், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது உயிரிழந்துள்ள மூவருக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் 9 ஆண்களை கிராமத்தில் இருந்து ராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் முதலில் மால் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின் பாஃப்லியாஸ் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சனிக்கிழமை காலை 8 மணிக்கு இறந்தவர்களது உடல்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்களை அடக்கம் செய்யப்போகிறோம். அவர்கள் தீவிரவாதம் செய்ததற்கான ஆதாரங்களை தரும்படி ராணுவத்திடம் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர்கள் பொதுமக்கள் 3 பேர் மீது மிளகாட் பொடி வீசும் 29 நொடி காணொளி ஒன்று வைரலாகி வருவதாக இந்து செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, “ராணுவத்தினர் மக்களைத் தாக்கும் வீடியோவையும், அவர்களது காயங்களில் மிளகாய்ப் பொடியை தெளிப்பதையும் வீடியோவாக பார்த்தேன். இருப்பினும் அதன் நம்பகத்தன்மை பற்றி எனக்கு தெரியாது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com