ராமர் கோவில் திறப்புக்காக 30 ஆண்டுகளாக மௌனவிரதம்; ஜனவரி 22ல் முடித்துக்கொள்ளும் ஜார்க்கண்ட் மூதாட்டி

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பினை ஒட்டி ஜார்கண்டை சேர்ந்த 85 வயது மூதாட்டி தனது மௌனவிரத்தினை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்.
சரஸ்வதி தேவி
சரஸ்வதி தேவிpt web

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பக்தர்களும் லட்சக்கணக்கில் அயோத்தியில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை ஒட்டி தனது 30 வருட மௌனவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர உள்ளார் ஜார்கண்டை சேர்ந்த 85 வயதான பெண்மணி.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் வசிப்பவர் 85 வயதான சரஸ்வதி தேவி. நான்கு குழந்தைகளுக்கு தாயான சரஸ்வதி தேவி, 1986 ஆம் ஆண்டு தனது கணவர் இறந்த நிலையில் தனது வாழ்நாளை ராமருக்கு அர்ப்பணித்தார் என்கின்றனர் அவரது குடும்பத்தினர். நாடு முழுவதுமுள்ள பல்வேறு கோவில்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் சரஸ்வதிதேவி.

இதுகுறித்து அவரது இளைய மகனான 55 வயதுடைய ராம் அகர்வால், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் வரை மௌனவிரதம் கடைபிடிக்கப்போவதாக 1992 ஆம் ஆண்டு என் அம்மா சபதம் எடுத்தார். கும்பாபிஷேகம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்” என தெரிவித்தார்.

வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடம் அவர் பேச சைகை மொழியையும் கடினமான சொற்களைப் பேச காகிதத்தில் எழுதிக் காண்பிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். நாளொன்றில் 23 மணி நேரம் மௌன விரதம் இருப்பார் என்றும் மதியம் 1 மணி நேரம் மட்டும் மற்றவர்களுடன் பேசுவார் என்றும் தெரிவிக்கும் குடும்பத்தினர், 2020 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியபின் 24 மணி நேர மௌன விரதத்திற்கு சென்றார் என கூறுகின்றனர்.

2001 ல் ராமர் வனவாசம் சென்றதாக கருதப்படும் மத்தியப்பிரதேசத்தின் சித்ரகூட் பகுதிகளில் 7 மாதங்கள் வரை சரஸ்வதி தேவி தவம் செய்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உட்கொள்வார் என்றும் இரு வேளைகளில் பால் சாப்பிடுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, சரஸ்வதிதேவி ரயில் மூலம் அயோத்தி சென்றுள்ளார். ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் அவரது மௌன விரதத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com