ஜார்க்கண்ட் | ‘HM செய்யும் செயலா இது?’ - மாணவிகள் உடை தொடர்பாக பெண் பள்ளி முதல்வரின் அநாகரீக செயல்!
ஜார்க்கண்ட்டில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர், தங்களது சட்டைகளில் பெயர் மற்றும் சில வசனங்களை விளையாட்டுத்தனமாக எழுதியுள்ளனர். இதனைக்கண்டு ஆத்திரமடைந்த அப்பள்ளியின் பெண் முதல்வர், அம்மாணவிகளை மேல் சட்டையை கழற்றிவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு உத்தரவிட்டுள்ள சம்பவம் பலத்த கண்டனங்களை பெற்று வருகிறது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் திக்வாடியில் இயங்கிவருகிறது கார்மல் பள்ளி. அங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இறுதி தேர்வு முடிந்துவிட்டதை கொண்டாடும் விதமாக, ஒருவருக்கொருவர் சட்டைகளில் வாழ்த்துகளை தெரிவிக்கும்விதமாக, தங்களின் பெயர்களையும் சில வாசகங்களையும் எழுதியுள்ளனர்.
இதனைக்கண்ட அப்பள்ளியின் முதல்வர் எம்.தேவஸ்ரீ என்பவர், ‘இப்படி செய்வது பள்ளியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும்’ என்று கண்டித்துள்ளார். அத்துடன், 100க்கும் மேற்பட்ட மாணவிகளின் மேல் சட்டையை கழற்ற வைத்து, அப்படியே வீட்டுக்கு செல்லும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதனால், உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு மாணவிகள் வீடு சென்றுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், நேற்றைய தினம் இதுபற்றி அம்மாவட்ட டிசியிடம் இதுக்குறித்து புகார் அளித்துள்ளனர்.
பெற்றோர்களின் கூற்றுப்படி, “முதல்வர் நடத்தையால் பயந்த எங்களின் பிள்ளைகள், பள்ளியின் வளாகத்திலேயே சட்டைகளை கழற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சிலர் தயங்கியுள்ளனர். ஆனாலும், அவர்களையும் மிரட்டி வற்புறுத்தி இதை செய்ய வைத்துள்ளனர். சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் மாற்று சட்டைகளை வைத்திருந்ததால், அதை போட்டுக்கொண்டனர். ஆனால், 100க்கும் மேற்பட்டோர் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து வீட்டிற்கு வந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பல மாணவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாகவும், பலர் பள்ளிக்கு திரும்ப தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
துணை கமிஷனர் மாத்வி மிஸ்ரா இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். குழுவில் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் (SDM), மாவட்டக் கல்வி அலுவலர் (DEO), மாவட்ட சமூக நல அலுவலர் (DSWO), துணைப் பிரிவு காவல் அதிகாரி (SDPO), மற்றும் ஜாரியா காவல் நிலையப் பொறுப்பாளர் ஆகியோர் உள்ளனர்.
இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அமைக்கப்பட்டுள்ள குழுவினர் நடத்தும் விசாரணை முடிவுகளின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதேநேரம் இச்செயலை செய்த பள்ளியின் முதல்வர் இதுவரை தன் செயலுக்கு எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.
பிள்ளைகளுக்கு நல் ஒழுக்கத்தையும், நல்ல எண்ணங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளியின் முதல்வரே இத்தகையை செயலை செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கண்டத்தை பெற்று வருகிறது.