’ஜம்முவின் இதயத்துடிப்பு’ எனப் புகழப்பட்ட பிரபல RJ-க்கு நேர்ந்த சோகம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர், சிம்ரன் சிங். பிரபல ஃப்ரீலான்ஸ் ரேடியோ ஜாக்கியாக அறியப்படும் இவர், இன்ஸ்டாகிராமில் ஏறக்குறைய ஏழு லட்சம் ஃபாலோயர்ஸ்களைப் பின்தொடர்கிறார். RJ சிம்ரன் என்று செல்லமாய் அழைக்கப்படும் இவர், அவரது ரசிகர்களால் "ஜம்மு கி தட்கான் (ஜம்முவின் இதயத்துடிப்பு)" எனப் புகழப்படுகிறார். இவர், கடைசியாக டிசம்பர் 13ஆம் தேதி ரீல்ஸ் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அன்று அவர் இடுகையிட்ட ரீலில், "ஒரு பெண் முடிவில்லாத சிரிப்பு மற்றும் அவளது கவுன், கடற்கரையை எடுத்துக்கொள்கிறாள்" எனப் பதிவிட்டுள்ளார்.
குருகிராமில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், தற்போது அவர் தற்கொலை செய்திருப்பது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்த விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். ”அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும், அவரது குடும்பத்தினரும் இதுவரை எந்தப் புகாரும் அளிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவருடைய பெற்றோர், “சிம்ரன் சிறிது நேரம் மனமுடைந்து இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம். ஆனால் இந்த தற்கொலை சம்பவத்தில் அவள் யாரையும் பொறுப்பாக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.
அவருடைய மறைவுக்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், "சிம்ரனின் குரல் மற்றும் வசீகரம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் உணர்வோடு எதிரொலித்தது. எங்கள் பிராந்தியத்தின் கலாச்சார கட்டமைப்பிற்கு அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது.