மதுரை அருகே உள்ள பூமி உருண்டை தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து (42). இவர் கார்ப்பென்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஜாக்லின் ராணி (36). இவர்களுக்கு மதுமிதா (12) என்ற ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் இன்று காளிமுத்துவின் தனது மனைவிக்குப் பிறந்தநாள் என்பதால் மகள் மதுமிதாவுடன் காலை 11 அளவில் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு காளிமுத்து வாட்ஸ்அப்பில் மனைவிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்டேடஸ் வைத்துள்ளார்.
இதனையடுத்து சிறிது நேரத்தில் காளிமுத்து வீட்டிலிருந்து கிளம்பிச் சென்ற அவர் கூடல் நகர் ரயில்வே நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்குத் தண்டவாளத்தில் நின்றபடி திடீரென அவரது வாட்ஸ் அப் ஸ்டேடசில் "விடைபெறுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் முதன் முறையாக காளிமுத்து தனது வாட்ஸ்அப் ஸ்டேடசில் மனைவி மற்றும் மகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை வைத்துள்ளார்.
இதனை பார்த்த காளிமுத்துவின் உறவினர்கள் ஸ்டேடஸ் குறித்துச் சந்தேகமடைந்து காளிமுத்துவின் மனைவிக்குத் தொடர்பு கொண்டுள்ளனர்.அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்து பக்கத்து வீட்டு நபர்களிடம் விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காளிமுத்துவின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளனர். அப்போது வீடு உள் பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது காளிமுத்துவின் மனைவி ஜாக்குலினும், மகள் மதுமிதாவும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து செல்லூர் காவல்நிலையத்திற்குப் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் காளிமுத்துவின் உடலை மீட்ட கூடல்புதூர் காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
மனைவியின் பிறந்தநாளில் குடும்பத்தினர் கேக்வெட்டி உற்சாகமாகக் கொண்டாடிய சில மணி நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.