ஜம்மு - காஷ்மீர் | 20 வருட திட்டம்.. துப்பாக்கிச்சூட்டில் நூலிழையில் உயிர் தப்பிய முன்னாள் முதல்வர்!
ஜம்முவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஃபரூக் அப்துல்லா மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றார். ஆனால் பாதுகாப்புப் படையினர் விரைவாக நடவடிக்கை எடுத்ததால் முன்னாள் முதல்வர் உயிர் தப்பினார். கைதுசெய்யப்பட்ட அந்த நபர் தற்போது போலீஸ் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, அம்மாநில துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரியுடன் ஹோட்டலில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நேற்று கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தச் சம்பவத்தில் பரூக் அப்துல்லா நூலிழையில் உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியுடன் இருந்த ஒருவரை கைது செய்தனர். கமல் சிங் என்று அறியப்பட்ட அவர், கடந்த இருபது வருடங்களாக ஃபரூக் அப்துல்லாவைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 63 வயதான ஜம்முவைச் சேர்ந்த அவர், தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் ஃபரூக் அப்துல்லாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஆதாரங்களின்படி, குற்றம்சாட்டப்பட்டவர் ஜம்முவின் பழைய பகுதியில் சில கடைகளை வைத்திருக்கிறார். அதிலிருந்து வரும் வாடகையில் அவர் பிழைப்பு நடத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலின்போது குற்றம்சாட்டப்பட்டவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மூத்த அரசியல்வாதியைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வளையத்தை அந்த சந்தேக நபர் எவ்வாறு உடைத்தார் என்பதைப் புரிந்துகொள்ள பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், ஃபரூக் அப்துல்லாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருந்தபோதிலும் இந்தச் சம்பவம் நடந்திருப்பது கவலை அளிக்கிறது என முதல்வரும் அவருடைய மகனுமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஃபரூக் அப்துல்லாவைப் பாதுகாத்த பாதுகாவலர்களைப் பாராட்டியுள்ளார். பரூக் அப்துல்லா பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

