'சில ட்விட்டர் ஐடிக்களை முடக்கும்படி மிரட்டியது இந்தியா' - முன்னாள் CEO பரபரப்பு குற்றச்சாட்டு

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து பதிவிடும் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என இந்திய அரசு மிரட்டல் விடுத்ததாக ட்விட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Jack Dorsey
Jack DorseyFile Image

கடந்த 2020-இல் மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு வருடமாக டெல்லியை முற்றுகையிட்டுப் போராடிய விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, 2021 நவம்பரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் திரும்பப் பெறப்படுவதற்கு முன்னர் வட இந்திய மாநிலங்களில் விவசாயிகள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஆதரவுக் குரல்கள் எழுந்தன. அதேபோல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விவசாயிகளின் அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவுகள் ட்ரெண்ட் செய்யப்பட்டன. இதனால் மத்திய பாஜக அரசு கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.

Jack Dorsey
Jack Dorsey

இந்நிலையில் இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடக்கும் போது மத்திய அரசால் தாங்கள் மிரட்டப்பட்டதாக ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரும், அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜாக் டோர்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜாக் டோர்சியிடம் வெளிநாட்டு அரசு தரப்பிலிருந்து ஏதேனும் அழுத்தத்தை எதிர்கொண்டீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜாக் டோர்சி, ''இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடக்கும் போது அது தொடர்பாக பதிவுகளை வெளியிடும் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று இந்திய அரசால் நாங்கள் மிரட்டப்பட்டோம். இந்தியாவில் ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என்றும் ட்விட்டர் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடக்கும் என்றும் மிரட்டினார்கள். சிலரது வீடுகளில் ரெய்டு நடந்தது. ட்விட்டரை இந்தியாவில் கட்டுப்படுத்துவோம் என்றும் சொல்லப்பட்டது. ஆம் இதெல்லாம் நடந்தது இந்தியா எனும் ஜனநாயக நாட்டில்'' என்று கூறினார்.

மேலும் அவர், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மற்றும் அரசை விமர்சிப்பவர்களின் ஐடியை முடக்கும்படி தங்களது நிறுவனத்திற்கு நிறைய கோரிக்கைகள் வந்ததாகவும், குறிப்பிட்ட சில பத்திரிக்கையாளர்களை சுற்றியும் தங்களுக்கு கோரிக்கைகள் வந்ததாகவும் ஜாக் டோர்சி கூறினார்.

Jack Dorsey
Jack Dorsey

தொடர்ந்து ஜாக் டோர்சி கூறுகையில், இந்தியாவைப் போல் துருக்கி அரசும் ட்விட்டரை மிரட்டிப் பார்த்தது என்றும் நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும் அவர், ட்விட்டர் நிறுவன உரிமையாளரான பிறகு எலான் மஸ்க் ட்விட்டரில் செய்த சில நகர்வுகளை 'மிகவும் பொறுப்பற்றது' என்றும் ஜாக் டோர்சி விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com