சிவனுக்கு எந்த பிரத்யேக ட்விட்டர் பக்கங்களும் இல்லை - இஸ்ரோ
இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அதிகாரப்பூர்வமான எந்த பிரத்யேக ட்விட்டர் பக்கங்களும் இல்லை என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
சந்திரயான்-2 திட்டத்தின் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டர் நிலவில் தரையிறங்குவதை காண இந்தியாவே காத்திருந்த நிலையில் அது நடக்காமல் போனது. இதனிடையே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், இருக்கும் இடம் இன்று தெரியவந்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து லேண்டர் மற்றும் அது என்ன ஆனது..? என்பது குறித்து அறிந்துகொள்ள மக்கள் காத்திருக்கும் நிலையில், இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை பலரும் நாடி வருகின்றனர். இஸ்ரோவுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இருக்கும் நிலையில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஏதும் இல்லை என புதிய தலைமுறையிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தனது பெயரில் உலா வரும் கணக்குகள் போலியானவை எனவும் தெளிவு படுத்தினார். இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அதிகாரப்பூர்வமான எந்த பிரத்யேக ட்விட்டர் பக்கங்களும் இல்லை என்றும் கைலாசவடிவு சிவன் என்ற பெயரில் இருக்கும் ட்விட்டர் பக்கங்கள் சிவனுக்கு சொந்தமானது இல்லை என்றும் இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.