இந்துக்களை பிளவுபடுத்துகிறதா ராமர் கோவில் விவகாரம்? பத்திரிகையாளர் ப்ரியன் சொல்லும் பதில்!

“இந்தியாவின் தெற்கு பக்கம் கோவிலின் கருவறைக்குள்ளும், விக்ரஹத்தை தொட்டு பேசுவதற்கும் பக்கதர்களுக்கு அனுமதி கிடையாது. அதே நேரத்தில் வடஇந்தியாவில் பக்தர்கள் விக்ரஹத்தை தொட்டு அதற்கு அபிஷேகம் செய்வதற்கு அனுமதி உண்டு” - பத்திரிகையாளர் ப்ரியன்
பத்திரிகையாளர் ப்ரியன்
பத்திரிகையாளர் ப்ரியன்புதிய தலைமுறை
Published on

புதிய கோணம் பகுதியில் அயோத்தி ராமர் கோவில் குறித்து பத்திரிக்கையாளரான பிரியன் நம்முடன் பேசியவற்றை, இங்கே காணலாம்..

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான துறவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களும் லட்சக்கணக்கில் அயோத்தியில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்து மதத்தின் நான்கு முக்கிய பீடாதிபதிகளான சங்கராச்சாரியார்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர் ப்ரியன்
ராமர் சிலை பிரதிஷ்டை: அழைப்பிதழ் நிராகரிப்பு.. மோடிக்கு எதிர்ப்பு.. அதிரடியில் பூரி சங்கராச்சாரியார்

இதன் பின்னணியாக, “சனாதன தர்மத்தில், ஆகம விதிகளின்படி இத்தகைய கோவில் கட்டப்படவில்லை என்பதால் சனாதன தர்மத்தை பின்பற்றும் சங்கராசாரியார்கள் இதில் கலந்துக்கொள்ளவில்லை” என்று பத்திரிகையாளரான பிரியன் நம்முடம் பேசும் பொழுது கூறினார்.

மூத்த பத்திரிகையாளர் பிரியன்
மூத்த பத்திரிகையாளர் பிரியன்

இதுகுறித்து அவர் விரிவாக பேசியது என்ன என்பதை பார்க்கலாம்.

“ஒரு விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்யும்பொழுது ஆகம விதிகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் அந்த விக்ரஹத்திற்கு சக்தி ஏற்படும் என நம்பப்படுகிறது.

ஒரு கோவிலானது ஆகமவிதிகளின்படி கட்டப்படும்பொழுது வேதவிற்பனர்கள் மந்திரம் கூறி, ஹோமம் (அக்னி) வளர்ப்பார்கள். ஹோமம் வளர்ப்பதற்கும் சில சம்பிரதாயங்கள் உண்டு. இதுதான் ஒரு தெய்வத்திற்கும் விக்ரஹத்திற்கும் உண்டான தொடர்பை ஏற்படுத்தும்.

மட்டுமன்றி இப்பொழுது கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் முழுமையாக கட்டப்படவில்லை. முழுமையடையாத கோவிலில் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தல் கூடாது. இப்படி பல பிரச்னைகள் இருப்பினும், இந்த கோவில் கட்டுவது ஒரு அரசியல் ரீதியானதாக கருதப்படுகிறது.

இக்கோயில் இந்துக்களை இரண்டாக பிளவுபடுத்துகிறது. மதரீதியான இந்துக்களுக்கு இதில் உடன்பாடு இல்லை. அதே சமயம் அரசியல் ரீதியான இந்துக்களை இச்செயல் மகிழ்விக்கிறது.

அதே போல் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யும் முன்னதாக தானியங்கள், பால், தண்ணீர் என்று விக்ரஹங்கள் பாலாலயம் செய்யப்பட்டு பல சடங்குகள் முறையாக கையாளப்பட்டு பிறகுதான் முறையாக கோவில் கும்பாபிஷேகமானது நடைபெறும். ஆனால் இங்கு அப்படி எதுவும் நடப்பது போல தோன்றவில்லை.

piriyan
piriyanPT

பூரிஜெகன்நாத சங்கராச்சாரியார் சொல்லும் போது, ’மோடி சிலையை வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பார், நான் அதற்கு கைத்தட்டனுமா?’ என்று கேட்டார். என்னை பொருத்தவரை மோடி அப்படி செய்வார் என்று தோன்றவில்லை. ஆகமவிதிகளுக்கு உட்பட்டு கொஞ்சம் தள்ளிதான் நிற்பார். அதே சமயத்தில் தன்னால்தான் இந்த நிகழ்வானது நடக்கிறது என்பதை நமக்கு தெளிவுபடுத்துவார்.

அத்வானி முன்னிலையில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்று நமக்கு தெரியும். இப்போது (2024 தேர்தலுக்கு முன்) அதை முன்வைத்து திறக்கப்படும் இக்கோயில், ‘இடித்ததும் நாங்கள்தான் கட்டியதும் நாங்கள்தான்’ என்று அக்கட்சியினர் நடத்தும் ஒரு அரசியல் விளையாட்டு போலதான் தெரிகிறது” என்றார்.

‘எனில் அயோத்தி ராமர் கோயிலில் ஆகமவிதிமுறை மீறப்படுகிறதா?’

”இந்தியாவின் தெற்கு பக்கம் கோவிலின் கருவறைக்குள்ளும், விக்ரஹத்தை தொட்டு பேசுவதற்கும் பக்கதர்களுக்கு அனுமதி கிடையாது. அதே நேரத்தில் வடஇந்தியாவில் பக்தர்கள் விக்ரஹத்தை தொட்டு அதற்கு அபிஷேகம் செய்வதற்கு அனுமதி உண்டு. இதில் எது ஆகமவிதி என்பது சங்கராச்சாரியார் போன்றவர்களுக்குத்தான் தெரியும். அதே சமயம் வைணவத்திலும் சைவத்திலும் பல வேறுபாடு உண்டு. ஆகவே வட இந்தியர்களின் மரபின் அடிப்படையில் மோடி அவர்கள் ராமர் விக்ரஹத்தை தொட்டு அபிஷேகம் செய்வதாகவும் இருக்கலாம்” என்றார். பிரியனின் முழு பேட்டியை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com