தெலங்கானா | புதிய கட்சி தொடங்குகிறாரா கவிதா? BRSல் இருந்து விலகிய நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை?
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கல்வகுந்த்லா கவிதா பி.ஆர்.எஸ். (பாரத ராஷ்டிர சமிதி) கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். மேலும் தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே, கவிதா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் கட்சியிலிருந்து விலகியிருப்பது தெலங்கானா அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி என்ன?
தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அக்கட்சி, கடந்த பிஆர்எஸ் ஆட்சியின்போது நடந்த முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் அவ்வப்போது பேசிவருகிறது. அந்த வகையில், பி.ஆர்.எஸ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட காலேஸ்வரம் லிஃப்ட் பாசனத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆளும் காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கே.சந்திரசேகர் ராவின் மகளான கே.கவிதா, பி.ஆர்.எஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தனது உறவினர்களுமான ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதில், “கே.சி.ஆருக்கு ஊழல் கறை ஏன் வந்தது என்பதை நாம் (பி.ஆர்.எஸ்.) சிந்திக்க வேண்டும். கே.சி.ஆருக்கு நெருக்கமான சிலர், அவரது பெயரைப் பயன்படுத்தி பல வழிகளில் பயனடைந்துள்ளனர். அவர்களின் தவறான செயல்களால் இன்று கே.சி.ஆரின் பெயர் அவதூறாகப் பேசப்படுகிறது. அதே நபர்களை ஊக்குவித்தால் கட்சி எப்படி முன்னேற முடியும்?” மேலும், கட்சிக்குள் இருப்பவர்களே கட்சியை பலவீனப் படுத்துகிறார்கள் எனவும் பேசியிருந்தார்.
இதற்கிடையே கட்சி ஏற்கெனவே பல சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், கவிதாவின் தொடர் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கட்சி விரோத நடவடிக்கைளுக்காக கவிதாவை அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர் ராவ் இடைநீக்கம் செய்திருந்தார்.
கட்சியிலிருந்து விலகல்
இந்த நிலையில் இது குறித்து ஹைதராபாதில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கவிதா, “எனக்கு பதவிகள் மீது பேராசை இல்லை. நான் பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். சட்டமன்ற சபாநாயகரிடம் எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளேன்” என்று தெரிவித்தார். மேலும் ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோரின் அழுத்தத்தினாலேயே என்னை இடைநீக்கம் செய்யும் கடினமான முடிவை எனது தந்தை எடுத்திருக்கிறார் என குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து தான் எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதே நேரம் கவிதா தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற பெயரில் கட்சி தொடங்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கல்வகுந்த்லா கவிதா பி.ஆர்.எஸ். (பாரத ராஷ்டிர சமிதி) கட்சியிலிருந்து விலகியிருப்பது தெலுங்கானா அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.