அன்று மகன்.. இன்று மகள்.. சட்டச் சிக்கலை எதிர்கொள்ளும் ஷாரூக்கான் குடும்பம்.. நடந்தது என்ன?
சட்டச் சிக்கலில் ஷாரூக்கான் மகள்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கானுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மகள் சுஹானா கான், அலிபாக்கில் விவசாய நிலங்களை வாங்கியதில் சட்டச் சிக்கலை எதிர்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள அலிபாக்கில், கடந்த 2023-24ஆம் ஆண்டில், சுமார் ரூ.22 கோடி மதிப்புள்ள இரண்டு மனைகளை சுஹானா கான் வாங்கியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த மனைகள் தேஜாவு ஃபார்ம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அறிக்கைகளின்படி, இந்த நிலங்களில் ஒன்று, அலிபாக்கின் தால் கிராமத்தில் உள்ளது. சுஹானா, அதை ரூ.12.91 கோடிக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலம், முதலில் அரசாங்கத்தால் விவசாய நோக்கங்களுக்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைப் பெற, சுஹானா ரூ.77.46 லட்சம் முத்திரை வரியைச் செலுத்தியுள்ளார். மேலும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில், சுஹானா ஒரு விவசாயியாகக் காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில், விவசாய நோக்கங்களுக்காக வாங்கப்பட்டு, பின்பு அதைத் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பண்ணை இல்லமாகப் மாற்றியதன் பேரில், அலிபாக்கில் உள்ள அவருடைய பங்களாவை, வருமான வரித் துறையினர் தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக குடியிருப்பு துணை ஆட்சியர் சந்தேஷ் ஷிர்கே, அலிபாக் தாசில்தாரிடமிருந்து ஒரு பாரபட்சமற்ற அறிக்கையைக் கேட்டுள்ளார். இதில், முறைகேடுகள் உறுதிசெய்யப்பட்டால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த விஷயத்தில் சுஹானா கான் அல்லது ஷாருக்கான் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் மகன் கைது
முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மஹாராஷ்டிராவில் சொகுசு கப்பல் ஒன்றில், போதைப் பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோரை என்.சி.பி. எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படாததைத் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சுஹானா கான்?
ஜோயா அக்தரின் ’தி ஆர்ச்சீஸ்’ படத்தில் அகஸ்திய நந்தா, குஷி கபூர் மற்றும் பலருடன் இணைந்து நடித்ததன் மூலம் சுஹானா கான் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படம் மக்களிடமிருந்து கலவையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், சுஹானா கான் தற்போது அவரது தந்தை ஷாருக் கானுடன் ’கிங்’ படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் அர்ஷத் வார்சி, அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், ராகவ் ஜுயல், அபய் வர்மா, சவுரப் சுக்லா, ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். ஷாருக்கானின் தோள்பட்டை காயம் காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஷாருக்கானின் உடல்நிலை சரியானவுடன் மீண்டும் விரைவில் கிங் படப்பிடிப்பு தொடரும் எனக் கூறப்படுகிறது.