“அடேங்கப்பா.. இத்தன ரெய்டா” - IT, ED ரெய்டுகளால் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறதா பாஜக? - இதோ லிஸ்ட்

அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறதா ஆளும் பாஜக அரசு? காங்கிரஸ் ஆண்ட போது நடந்தது என்ன? தற்போது நடப்பது என்ன? குறிவைக்கப்படுகிறார்களா திமுக முக்கிய புள்ளிகள்?
it raid in bjp govt
it raid in bjp govtfile image

நம்ம நாட்ல ED, IT & CBI RAID நடக்குற செய்திகள் அப்பப்போ வெளியாகிட்டே இருக்கு. அதுலயும் குறிப்பா, இந்த ரெய்டுகள் எல்லாமே மத்தியில ஆட்சியில இருக்கக்கூடிய பாஜக ஆளாத மாநிலங்கள்லதான் அதிகமா நடந்துட்டு வருது (இதுக்கு முன்னாடி காங்கிரஸ் ஆட்சியிலயும் இப்படியான குற்றச்சாட்டுகள் வந்தது தனிக்கதை). நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வர்ற இந்த நேரத்துல, 5 மாநில தேர்தல் நடக்கக்கூடிய சூழல்ல, எதிர்க்கட்சிகள மிரட்டவும், பழிவாங்கவும்தான் ED, IT மாதிரியான சுதந்திரமான அமைப்புகள மத்திய அரசு பயன்படுத்திட்டு வருதுன்னும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிகிட்டு வர்றாங்க..

இதுல கவனிச்சி பாக்க வேண்டிய விஷயம் என்னன்னா? EDன்னு சொல்லக்கூடிய அமலாக்கத்துறையும், ITன்னு சொல்லக்கூடிய வருவமானவரித்துறையும், குறிப்பா, CBIன்னு சொல்லக்கூடிய மத்திய புலனாய்வு அமைப்பும் கடந்த ஆட்சி காலங்கள்ல நடத்துன சோதனைகளோட எண்ணிக்கைக்கும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடத்துன சோதனைகளோட எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. அதுலயும் எதிர்க்கட்சிகள குறிவச்சு நடத்தப்பட்ட ரெய்டுகளோட எண்ணிக்கை, உண்மையிலயே வாய பிளக்க வைக்கும்.

கடந்த 18 வருடங்கள்ல, மொத்தமா 147 முக்கியமான அரசியல் தலைவர்களுக்கு தொடர்புடைய இடங்கள்ல அமலாக்கத்துறை சோதனை நடந்திருக்கு. இதுல 85 சதவீதம் பேர் எதிர்க்கட்சிகள சேர்ந்த அரசியல்வாதிங்க.

அதே சமயம் 2004 - 2014க்கு இடைப்பட்ட காங்கிரஸ் ஆட்சி காலத்துல 26 அரசியல் தலைவர்களுக்கு தொடர்புடைய இடங்கள்ல ED ரெய்டு நடந்தது, அதுல 14 பேர் எதிர்க்கட்சிகள சேர்ந்தவங்க, ஆனா 2014ல பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மொத்தமா 121 அரசியல் தலைவர்களுக்கு தொடர்புடைய இடங்கள்ல அமலாக்கத்துறை சோதன நடந்திருக்கு. இதுல 115 பேர் எதிர்க்கட்சிகள சேர்ந்தவங்க.

CBI ரெய்டுன்னு பாத்தா 2004 - 2014க்கு இடைப்பட்ட காலத்துல 72 அரசியல் தலைவர்களுக்கு சம்மந்தப்பட்ட இடங்கள்ல ரெய்டு நடந்துருக்கு, அதுல 43 பேர் எதிர்க்கட்சிகள சேர்ந்தவங்க. ஆனா, 2014க்கு அப்புறமா பாஜக ஆட்சியில 124 இடங்கள்ல CBI ரெய்டு நடந்திருக்கு அதுல 118 பேர் எதிர்க்கட்சிகள சேர்ந்தவங்க.. இந்த ரெய்டுகள் எல்லாமே டல்லில நடக்கக்கூடிய ஆம் ஆத்மி Govermentல ஆரம்பிச்சு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு அப்டின்னு எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்கள்ல அதிகமா நடந்திருக்கு.

இந்த விஷயம் பத்தி பேசியிருக்கக்கூடிய ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதா, காங்கிரஸோட 2004 - 2014க்கு இடைப்பட்ட ஆட்சி காலத்துல 112 இடங்கள்ல மட்டும்தான் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது. ஆனா, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 3000க்கும் மேற்பட்ட இடங்கள்ல ரெய்டு நடந்திருக்குன்னு சொல்றாரு.

அதேபோல, கடந்த 9 வருஷத்துல பாஜக ஆட்சியில அமலாக்கத்துறை பதிவு செஞ்ச 1569 வழக்குகள்ல 9 வழக்குல மட்டும்தான் குற்றம்சாட்டப்பட்டவங்க, தண்டிக்கப்பட்டாங்க, மற்றவங்க எல்லோர் மேலயும் ஆதாரம் இல்லாம, அரசியல் பழிவாங்குற நடவடிக்கையே எடுக்கப்பட்ருக்குன்னு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி சொல்றாரு.

நேற்று கூட திமுக கூட்டத்துல இடம்பெற்ற முதல்வரோட உரையில, பாஜக ஆளக்கூடிய மாநிலங்கள்ல ED, IT & CBI officers தங்களோட அலுவலகத்த விட்டே வெளிய வர்றது இல்ல. மற்ற எதிர்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்கள்ல தொடர்ச்சியா ரெய்டு நடத்தப்படுதுன்னு குற்றம்சாட்டப்பட்டது. அந்த வகையில, தமிழ்நாட்டுல, திமுக ஆட்சிக்கு வந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் வீடுகள்ல நடத்தப்பட்ட ரெய்டுகள பத்தி பேசியே ஆகணும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த ஒரு முக்கியமான முதல் ரெய்டுன்னா, அது அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்ல நடந்த வருமானவரித்துறை ரெய்டுதான். அதாவது, கரூர்ல அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் மே 25ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினாங்க. அதன் தொடர்ச்சியா ஜூன் 13ஆம் தேதி

அமலாக்கத்துறை சோதனை நடந்துச்சு. அதற்கு அடுத்த நாள் ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்துல செந்தில் பாலாஜி கைதானாரு.. அதற்கு அப்புறமும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்கள்ல மறுபடியும் வருமானவரித்துறை சோதனை நடந்துச்சு.. இப்போ வரைக்கும் ஜாமீன் கிடைக்காம சிறையில இருக்காரு செந்தில் பாலாஜி.

இத தொடர்ந்து, கடந்த ஜூலையில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனைய மேற்கொண்டாங்க. அதேபோல அவரோட மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டுலயும் அமலாக்கத்துறை சோதனை நீடிச்சது. இந்த சோதனையில பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

2 மாதம் ரெய்டோட சூடுலாம் தணிஞ்சதேன்னு இருந்தப்போ, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகங்கள், கல்லூரிகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் 5 நாட்கள் வருமான வரிசோதனை தொடர்ந்தது. அதில் பணம், நகை, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த வரிசையில் தற்போது அமைச்சர் எ.வ வேலுவின் வீடு உள்ளிட்ட இடங்களில் 4 நாட்களா சோதனை தொடர்ந்து வருது.. ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாடி திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்க விஷயம். இந்த வரிசையில அடுத்தடுத்த மூத்த அமைச்சர்கள் வீடுகள்ல ED, IT ரெய்டு நடத்தப்படலாம்னு அரசியல் வட்டாரத்துல பேசப்படுது. இங்க குறிப்பிட வேண்டிய விஷயம் என்னன்னா, இதுவரைக்கும் ரெய்டு நடத்தப்பட்ட திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் எல்லோருமே கட்சியோட கருவூலம்னே சொல்லணும்.

அப்போ பாஜக தலைவர்களுக்கு தொடர்புடைய இடங்கள்ல சோதனையே நடக்கலயான்னு ஒரு கேள்வி எழலாம். நடந்திருக்கு.. ஆனா வெகு சொர்ப்பமாகவே நடத்தப்பட்ருக்கு. மத்தியப்பிரதேசத்துல முன்னாள் கல்வித்துறை அமைச்சர் லக்‌ஷ்மிகாந்த் ஷர்மா, பிவிஎஸ் சர்மா, மோஹித் கம்போஜ் மாதிரியான தலைவர்களுக்கு சொந்தமான இடங்கள்ல ரெய்டு நடந்தாலும், அதற்கடுத்த விசாரணை அப்படியே கிடப்புலதான் போடப்பட்டிருக்கு.. இத மறைக்குறதுக்கு இல்ல..

செந்தில் பாலாஜில தொடர்ந்து, எவ. வேலு வரை நடத்தப்பட்ட இந்த ரெய்டுகள எல்லாம், அச்சுறுத்தி பார்க்கணும், திமுகவுக்கு பணம் போயி சேரக்கூடாதுன்னு நடத்தப்படுறதாவும், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிச்சிட்டு வர்றாங்க. எதிர்க்கட்சிகளோட கருத்துப்படி பார்த்தா, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரக்கூடிய சூழல்ல, இன்னும் பல இடங்கள்ல ரெய்டு நடத்தப்படலாம்னும் நம்பப்படுது.. என்ன நடக்கும்றத பொருத்திருந்துதான் பார்க்கணும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com