“மெய்தி, குக்கி மக்கள் இனி சேர்ந்து வாழ்வது கேள்விக்குறியே”- மணிப்பூரில் இருந்து எம்.பி. திருமாவளவன்
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக வெடித்து வரும் இன மோதல்களுக்கு மத்தியில், குக்கி இனப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே, கள நிலவரம் குறித்து ஆராய 2 நாள் பயணமாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த `INDIA’ (Indian National Developmental Inclusive Alliance) கூட்டணியின் எம்.பிக்கள் குழு, ஜூலை 29, 30 தேதிகளில் மணிப்பூர் சென்றது.
இக்குழுவில் விசிக தலைவர் திருமாவளவனும் இருந்தார். அவர் அங்கு இருந்த நிலவரம் குறித்து புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், “மணிப்பூர் சென்றது, ஒரு மாநிலத்திற்குள் 2 நாடுகளுக்கு சென்று வந்த உணர்வு இருந்தது. மெய்தி, குக்கி சமூக மக்கள் ஒரு நல்லினக்கமாக இணைந்து வாழ்வதற்கான சூழல் கனியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்” என்று கூறினார்.