மணிப்பூர் சென்ற INDIA கூட்டணி குழு: ஆளுநரைச் சந்தித்து புகார்!

மணிப்பூருக்குச் சென்றுள்ள INDIA கூட்டணியின் எம்.பிக்கள், அம்மாநில ஆளுநரைச் சந்தித்து அமைதியை கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.
 India கூட்டணி எம்.பிக்கள்
India கூட்டணி எம்.பிக்கள்PTI

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக வெடித்து வரும் இன மோதல்களுக்கு மத்தியில், குக்கி இனப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஸ்வாதி மாலிவால்
ஸ்வாதி மாலிவால்ani

பாதிக்கப்பட்ட மக்களை முதலில் சந்தித்த ஸ்வாதி மாலிவால்

இதற்கிடையே மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களையும், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களையும் டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். இதுகுறித்து அவர், “மணிப்பூரில் நடக்கும் வன்முறை மிகவும் கவலையளிக்கிறது. நான் செல்லும் இடமெல்லாம் மனதை உலுக்கும் சம்பவங்கள்தான் காதில் விழுகின்றன. மக்கள் பலரும் வீடுகளையும் உறவினர்களையும் இழந்துள்ளனர், அவர்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது” என பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

 India கூட்டணி எம்.பிக்கள்
மணிப்பூர்: “என்னால் வரமுடிகிறபோது, முதல்வரால் முடியாதா?”-பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்த DCW தலைவர்

`INDIA’ கூட்டணியின் எம்.பிக்கள் குழு மணிப்பூர் பயணம்

இந்த நிலையில், கள நிலவரம் குறித்து ஆராய 2 நாள் பயணமாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த `INDIA’ (Indian National Developmental Inclusive Alliance) கூட்டணியின் எம்.பிக்கள் குழு, நேற்று (ஜூலை 29) மணிப்பூர் சென்றது.

இந்தக் குழுவில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் (காங்கிரஸ்), சுஷ்மிதா தேவ் (திரிணாமுல் காங்கிரஸ்), கனிமொழி (திமுக), மனோஜ் குமார் ஜா (ராஷ்ட்ரீய ஜனதாதளம்), சந்தோஷ் குமார் (இந்திய கம்யூனிஸ்டு), ரகிம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட எம்.பிக்கள் 21 பேர் இடம்பெற்றிருந்தனர்.

PTI

மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய குழுவினர்

இந்த குழுவினர் வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், வன்முறை நடைபெற்ற பகுதிகளையும் ஆய்வு செய்தனர். இந்த நிலையில், மணிப்பூர் கவர்னர் அனுசுயா உய்கேயை எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழு இன்று (ஜூலை 30) சந்தித்தது.

இந்தச் சந்திப்பின்போது மணிப்பூரில் அமைதியை கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்கும்படி எதிர்க்கட்சி எம்.பிக்கள் கவர்னரிடம் வலியுறுத்தினர்.

ஆளுநரிடம் அறிக்கை அளித்த எதிர்க்கட்சி குழுவினர்

இதுகுறித்து ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் குழு வழங்கிய அறிக்கையில், ‘மணிப்பூரில் 140க்கும் மேற்பட்ட இறப்புகள், 500க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள், 5000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிப்பு மற்றும் உள் இடப்பெயர்வு ஆகியவை நடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. இதன்மூலம் இரு சமூகங்களின் மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தோல்வி தெளிவாகத் தெரிகிறது.

PTI

கடந்த சில நாட்களாக இடைவிடாது துப்பாக்கிச் சூடு மற்றும் வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் பற்றிய செய்திகளிலிருந்து, கடந்த மூன்று மாதங்களாக நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் அரசு இயந்திரங்கள் முற்றாகத் தவறிவிட்டன என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களின் நிலை பரிதாபமாக உள்ளது. குழந்தைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு கவனம் தேவை. பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர்.

india கூட்டணி குழுவினர்  - மணிப்பூர் ஆளுநர் சந்திப்பு
india கூட்டணி குழுவினர் - மணிப்பூர் ஆளுநர் சந்திப்புtwitter

இது மாநில மற்றும் மத்திய அரசுகளின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக தொடரும் இணையத் தடையானது ஆதாரமற்ற வதந்திகளுக்கு உதவியாக உள்ளது, இது தற்போதுள்ள அவநம்பிக்கையை மேலும் அதிகரிக்கிறது. பிரதமரின் மௌனம் மணிப்பூரில் நடந்த வன்முறையில் அலட்சியத்தை காட்டுகிறது.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த, பாதிக்கப்பட்ட நபர்களின் மறுவாழ்வு மற்றும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பது மிகவும் அவசரமானது. கடந்த 89 நாட்களாக மணிப்பூரில் நிலவும் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதை மத்திய அரசிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PTI

”மணிப்பூரில் நிலைமை மோசமாகி வருகிறது”!

கவர்னரை சந்தித்தபின் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”2 நாட்கள் பயணத்தின்போது நாங்கள் நேரில் கண்ட காட்சிகள், நாங்கள் பெற்ற அனுபவங்களை ஆளுநரிடம் கூறினோம்.

நாம் அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் என கவர்னரும் ஆலோசனை வழங்கினார். இங்கு நாங்கள் நேரில் கண்ட சம்பவங்களில் மத்திய, மாநில அரசுகளின் குறைபாடுகள் குறித்தும் கேள்வி எழுப்புவோம். மணிப்பூரில் நிலைமை மோசமாகி வருகிறது. இது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை அதிகரிக்கும்” என்றார்.

“முகாம்களில் மக்கள் வாழும் விதம் மனதை உருக்குகிறது”!

காங்கிரஸ் எம்பி பூலோதேவி நேதம், ”ஒரு மண்டபத்தில் 400-500 பேர் தங்கியுள்ளனர். குழந்தைகளுக்கு நாள் முழுவதும் சாப்பிட வேறு எதுவும் கிடைக்கவில்லை. கழிப்பறை, குளியலறை வசதி இல்லை. முகாம்களில் மக்கள் வாழும் விதம் மனதை உருக்குகிறது"

திமுக எம்.பி. கனிமொழி, "அவர்களுக்கு நீதி வேண்டும், வேறு என்ன வேண்டும்" எனக் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சி குழுவினரின் மணிப்பூர் வருகையை விமர்சித்த பாஜக!

முன்னதாக இக்குழுவினரின் மணிப்பூர் வருகை குறித்து விமர்சித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “முந்தைய அரசாங்கங்களில் மணிப்பூர் எரிந்து கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சிகள் வடகிழக்கு மாநிலத்தைப் பற்றி கவலைப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

அதுபோல் பாஜக தலைவர் அஜய் அலோக், ”India கூட்டணியின் பிரதிநிதிகள் மணிப்பூர் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களால் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியாது. மணிப்பூரில் என்ன மதிப்பீட்டை நடத்துவார்கள்? அவர்கள் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகவே மணிப்பூருக்குச் சென்றுள்ளனர்” என விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com